பாளையங்கோட்டையில் வாலிபரிடம் பணம்- செல்போன் பறிப்பு; கோவில் பூசாரி சிக்கினார்
பாளையங்கோட்டையில் வாலிபரிடம் பணம், செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற கும்பலை, சினிமா படம் போல் போலீசார் காரில் விரட்டிச் சென்றனர். இதில் கோவில் பூசாரி போலீசாரிடம் சிக்கினார்.
நெல்லை,
பாளையங்கோட்டை திருமால்நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் முத்துக்குமார்(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவில் புதிய பஸ்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 மர்ம நபர்கள், இவரை வழிமறித்து மிரட்டி செல்போன் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறித்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த முத்துக்குமார், இதுகுறித்து புதிய பஸ்நிலையத்தில் நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல், அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றனர். உடனே போலீசார் வயர்லெஸ் கருவி மூலம் மற்ற போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் வந்த காரை, பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகில் போலீசார் மடக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் பாளையங்கோட்டை பஸ்நிலைய பகுதியை கடந்து தெற்கு பஜார் வழியாக காரில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது கார், அங்குள்ள ஒரு கடை மீது மோதி நின்றது. உடனே காரில் இருந்து 2 பேர் இறங்கி தப்பி ஓடினர்.
தப்பி ஓட முயன்ற மற்றொருவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த ரவிசங்கர் (வயது 35) என்றும், தற்போது பாளையங்கோட்டையில் தங்கி சீவலப்பேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தப்பி ஓடிய 2 பேரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு காரில் தப்பி சென்ற நபரை சினிமா படம் போல் போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story