களக்காடு தொழிலாளி மலேசியாவில் தவிப்பு - மத்திய, மாநில அரசுகளுக்கு குடும்பத்தினர் கோரிக்கை


களக்காடு தொழிலாளி மலேசியாவில் தவிப்பு - மத்திய, மாநில அரசுகளுக்கு குடும்பத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2019 11:00 PM GMT (Updated: 20 Dec 2019 9:09 PM GMT)

மலேசியாவில் தோட்ட வேலைக்கு சென்ற களக்காடு தொழிலாளி மனநிலை பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அவரை மீட்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது 2-வது மகன் முத்துராஜ்(வயது33). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முத்துராஜ் தோட்ட வேலைக்காக மதுரையை சேர்ந்த ஏெஜண்டு ஒருவர் மூலம் மலேசியாவுக்கு சென்றார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சகோதரி வளர்மதியிடம் வாட்ஸ்-ஆப் மூலம் பேசிய முத்துராஜ், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு வருவதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் வாலிபர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், நிர்வாணமாக சுற்றிதிரியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த அவரது குடும்பத்தினர், அந்த வாலிபர் முத்துராஜ் என கண்டுபிடித்தனர்.

அவரது நிலையை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென்று அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது எப்படி? மலேசியாவில் அவர் எங்கே இருக்கிறார்? என தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மேலும் அவரை மீட்டு களக்காட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய,மாநில அரசுகளுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story