ராணிப்பேட்டை மாவட்ட முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது - கலெக்டர் திவ்யதர்‌ஷினி தகவல்


ராணிப்பேட்டை மாவட்ட முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது - கலெக்டர் திவ்யதர்‌ஷினி தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2019 4:00 AM IST (Updated: 29 Nov 2019 9:02 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்ட முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் 2-ந் தேதி திங்கட்கிழமை நடக்கிறது என்று கலெக்டர் திவ்யதர்‌ஷினி தெரிவித்துள்ளார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டராக திவ்யதர்‌ஷினி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு, ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் திவ்யதர்‌ஷினி நிருபர்களிடம் கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க ஐ.வி.பி.எம். இடத்தை தேர்வு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். இந்த இடத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் மற்ற அலுவலகங்களும் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணை கிடைக்க பெற்றவுடன் தமிழக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு 1½ வருடத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். அதுவரை தற்காலிக அலுவலகம் உள்ள இந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகமாக இயங்கும்.

2-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். ராணிப்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தேசிய நெடுஞ்சாலை உள்பட சில இடங்களில் நடைபெற்றது. மற்ற இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

இவ்வாறு கலெக்டர் திவ்யதர்‌ஷினி கூறினார்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், உதவி கலெக்டர் இளம்பகவத் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து ரெண்டாடி ஏரிமுனூர் பகுதியை சேர்ந்த மேகலா (வயது 25) என்ற ஆதரவற்ற விதவை பெண் வேலை கேட்டு முதல் மனுவை கலெக்டர் திவ்யதர்‌ஷினியிடம் வழங்கினார்.

நேற்று முதல் இயங்க தொடங்கிய ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Next Story