டாஸ்மாக் குடோனில் தீ விபத்து; 2 சரக்கு வேன்கள் எரிந்து நாசம் பல கோடி ரூபாய் மதுபாட்டில்கள் தப்பின


டாஸ்மாக் குடோனில் தீ விபத்து; 2 சரக்கு வேன்கள் எரிந்து நாசம் பல கோடி ரூபாய் மதுபாட்டில்கள் தப்பின
x
தினத்தந்தி 20 Nov 2019 4:30 AM IST (Updated: 19 Nov 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சரக்கு வேன்கள் எரிந்து நாசமாயின. தக்க நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தப்பின.

துவாக்குடி,

திருச்சியை அடுத்துள்ள துவாக்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மதுவகைகள் அனுப்பி வைக்கப்படும். மதுவகைகளை ஏற்றிச் செல்வதற்காக குடோன் வளாகத்தில் லாரிகள் மற்றும் சரக்கு வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்கு வேனின் என்ஜினில் இருந்து நேற்று அதிகாலை திடீரென தீப்பொறி எழுந்தது. பின்னர் வேன் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. அந்த தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சரக்கு வேனுக்கும் பரவி இரு வாகனங்களும் எரிய தொடங்கின.

தீயில் எரிந்து நாசம்

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பாய்லர் ஆலை மற்றும் நவல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 சரக்கு வேன்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் டாஸ்மாக் மண்டல முதன்மை மேலாளர் துரைமுருகன் மற்றும் திருவெறும்பூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சிவசுப்ரமணியன், திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சரக்கு வேனின் பேட்டரி அதிக வெப்பமாகி இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மதுபாட்டில்கள் தப்பின

தக்க நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் தப்பின. இந்த தீ விபத்து குறித்து வேன்களின் உரிமையாளரான திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த சசிராம்(வயது 42) மற்றும் வேன் டிரைவர்கள் தஞ்சை மாவட்டம் புதுக்குடியை சேர்ந்த விஜயகுமார்(36), திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செங்கரையூரை சேர்ந்த முரளிதரன்(38)ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story