தென் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ வசதி - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


தென் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ வசதி - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:00 AM IST (Updated: 7 Nov 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

தென் இந்தியாவில் முதல் முறையாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ வசதியை, காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மதுரை, 

உடல் உறுப்புகளில் புற்றுநோய் உருவாவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பயன்படும் ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ கருவி, மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ‘பெட்-சி.டி. ஸ்கேன்’ சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், கலெக்டர் வினய், பெரிய ஆஸ்பத்திரி டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் சங்குமணி, அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ கருவியை பார்வையிட்டு, கருவியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் இந்தியாவில் முதல் முறையாக அரசு ஆஸ்பத்திரிகளில் ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ கருவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதில் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படும். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை நகரானது, மருத்துவத்துறையின் 2-வது தலைநகராக மாறி வருகிறது.

ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த கருவியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். கடந்த 1986-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் முதல் முறையாக சி.டி. ஸ்கேன் வசதியை தொடங்கி வைத்தார். தற்போது பெட்-சி.டி. ஸ்கேன் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் இந்த ‘பெட்-சி.டி. ஸ்கேன்’ எடுப்பதற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். இந்த கருவி, மதுரை மக்களுக்கு மட்டுமல்லாது தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இன்னும் ஒரு சில வாரங்களில் சென்னையிலும் இதுபோன்ற ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ வசதி தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான எல்லா பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் ‘பெட்- சி.டி. ஸ்கேன்’ வசதி சேலம், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறும்போது, ‘பெட்-சி.டி. ஸ்கேன்' வசதி மூலம் உடலில் புற்று நோய் உள்ள இடத்தை விரைவிலும், துரிதமாகவும் ஆரம்ப நிலையில் கண்டறியலாம். புற்று நோய்க்கு சிகிச்சை அளித்த பின் சிகிச்சையின் பலன்களை இந்த கருவி மூலம் அளவிட்டு கொள்ளலாம். நோயின் தன்மை மற்றும் நோய் பரவி உள்ள பகுதிகளையும் அறியலாம். இருதய தசைகளின் செயல்பாட்டு நிலையை கண்டறியலாம். மூளையில் ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும் ஞாபக மறதி நோயின் தன்மையையும் கண்டறிய முடியும். வலிப்பு நோய் ஏற்பட காரணமாக உள்ள மூளையின் பாதிப்பு அடைந்த பகுதியை கண்டறியலாம். காரணம் இல்லாமல் உண்டாக கூடிய காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு, அதற்கான காரணத்தை அறியவும் உதவும்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் இந்த கருவி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையை சுற்றி உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இந்த கருவி பயன் உள்ளதாக இருக்கும். இந்த கருவியை செயல்படுத்துவதற்கான பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story