நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலா


நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலா
x
தினத்தந்தி 24 Oct 2019 3:30 AM IST (Updated: 24 Oct 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது.

நெல்லை, 

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழா நாட்களில் காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

8-ம் திருநாளான நேற்று முன்தினம் அம்பாள் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். நேற்று காலை காந்திமதி அம்பாள் செப்பு தேரில் வீதி உலாவும், இரவில் அம்பாளுக்கு சிவபூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் தந்தப் பல்லக்கில் வீதி உலா வருதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

10-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள், கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். ரதவீதி வழியாக மறுநாள் அதிகாலையில் கம்பாநதி காமாட்சி அம்மன் கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் நெல்லையப்பருக்கு, காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story