ஊட்டி-கூடலூர் சாலையை அகலப்படுத்தும் பணி மந்தம் விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஊட்டி-கூடலூர் சாலையை அகலப்படுத்தும் பணி மந்தமாக நடக்கிறது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
மலைப்பிரதேசமான ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
இதை தவிர்க்கும் வகையில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் இருந்து ரோகிணி சந்திப்பு, ஹில்பங்க், பழைய தபால் நிலையம் வழியாக பிங்கர்போஸ்ட் வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகின்றன.
இதற்காக சாலையோரங்களில் இருந்த மண் திட்டுகள் பொக்லைன் எந்திரம் மூலம் வெட்டி அகற்றப்பட்டு, அங்கு மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையை அகலப்படுத்துவதற்காக மண் எடுக்கப்பட்ட இடங்களில் இதுவரை தார்ச்சாலையோ அல்லது மழைநீர் செல்ல வடிகாலோ அமைக்கப்படவில்லை. இந்த பணி தொடங்கி ஓராண்டை கடந்தும் முழுமை பெறாமல் உள்ளது. ஊட்டி-கூடலூர் சாலை ரோகிணி சந்திப்பில் பஸ் நிறுத்தம் பகுதியில் குவியல், குவியலாக மண் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோகிணி சந்திப்பு பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மண் அகற்றப்பட்ட இடத்தில் மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு வந்து மண் லாரிகளில் கொட்டப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலையின் ஒருபுறத்தில் அகலப்படுத்தப்பட்ட பகுதியில் சாலை போடப்படாததால், மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் சமயத்தில் டயர் சேற்றில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக மழையில் நனைந்தபடி காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. அப்பகுதியில் மக்கள் சேற்றை கடந்து தான் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். அப்போது சேற்றில் வழுக்கி கீழே விழும் அபாயம் காணப்படுகிறது. சாலையை அகலப்படுத்தும் பணி மந்த கதியில் நடக்கிறது. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story