வெளிநாட்டில் இருந்து நெல்லை திரும்பிய வாலிபர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை
வெளிநாட்டில் இருந்து நெல்லை திரும்பிய வாலிபர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
புளியங்குடி,
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஆங்காங்கே சோதனைகளை நடத்தி வருகிறார்கள். இந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிலும், மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அதன் விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்தவர் திவான் முஜ்பூர் (வயது 35). புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதி தெற்கு தெருவை சேர்ந்தவர் மைதீன் (35). இவர்கள் 2 பேரும் வெளிநாட்டில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மைதீன் புளியங்குடிக்கு வந்து, அங்கு பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையே, திவான் முஜ்பூரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளாங்குளிக்கு வந்தார். பின்னர் அவர் புளியங்குடியில் உள்ள மைதீனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் தங்கியிருந்து பெயிண்ட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
திவான் முஜ்பூருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கொச்சி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலை 7 மணிக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரி விஜயகுமார் தலைமையில், அதிகாரிகள் இரு குழுவினராக பிரிந்து, வெள்ளாங்குளியில் உள்ள திவான் முஜ்பூரின் வீட்டிலும், புளியங்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் திவான் முஜ்பூரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 9 மணிக்கு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வெள்ளாங்குளியில் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரிடமும் அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த திவான் முஜ்பூரின் பாஸ்போட், 3 செல்போன்கள், ஒரு சிம்கார்டு மற்றும் முக்கிய சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்தார்கள். அதன்பிறகு அதிகாரிகள் அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் வெள்ளாங்குளியில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து திவான் முஜ்பூர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நாளை (திங்கட்கிழமை) கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
மேலும், மைதீனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story