நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் 15 நாட்களில் அமைக்கப்படும்: மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தகவல்


நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் 15 நாட்களில் அமைக்கப்படும்: மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2019 3:00 AM IST (Updated: 21 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் 15 நாட்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.78 கோடியே 51 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பஸ் நிலையம் தற்காலிகமாக சந்திப்பு பஸ் நிலையம் எதிரே செயல்பட்டு வருகிறது.

நெல்லை டவுன், பாளையங்கோட்டை செல்லும் டவுன் பஸ்களும், தாழையூத்து, சங்கர்நகர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றன. மேலும் இங்கிருந்து தனியார் பஸ்களும் நெல்லை டவுன், பாளையங்கோட்டை ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றன. இதுதவிர அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருவதால் அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, தற்காலிக சந்திப்பு பஸ் நிலையத்தை நெல்லை டவுன் பொருட்காட்சி திடலுக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு நெல்லை பகுதியை சுற்றி இயக்கப்படும் டவுன் பஸ்கள், தனியார் பஸ்கள், தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, “நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு தற்காலிக சாலை, கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 15 நாட்களுக்குள் நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் தற்காலிய பஸ் நிலையம் அமைக்கப்படும்“ என்றார்.

அவரிடம், நெல்லை டவுன் சுபாஸ் சந்திரபோஸ் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையத்தில் கடைகள் கொடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு கமிஷனர் விஜயலட்சுமி பதில் அளிக்கையில், “நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வணிக மையம் அமைக்கப்படுகிறது. அதற்கான திட்ட மதிப்பீடு ரூ.56 கோடியே 71 லட்சம் ஆகும். இந்த பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது குறுகிய இடத்தில் தான் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. எனவே தற்காலிக பஸ் நிலையத்தில் போஸ் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்க சாத்தியம் இல்லை“ என்றார்.

Next Story