மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு: நெல்லையில் 4,800 லாரிகள் ஓடவில்லை
மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் நேற்று 4,800 லாரிகள் ஓடவில்லை.
நெல்லை,
மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகமான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு போன்றவை ஏற்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்டத்தில் நேற்று 4,800 லாரிகள் ஓடவில்லை. இதையொட்டி நெல்லை டவுன் நயினார்குளம் கரையில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பழையபேட்டை, தச்சநல்லூர் புறவழிச்சாலை, டக்கரம்மாள்புரம் சோதனை சாவடி மற்றும் 4 வழிச்சாலை இணைப்பு பகுதிகளில் சாலையோரத்தில் லாரிகளை டிரைவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். சில டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் லாரியிலேயே சமையல் செய்து சாப்பிட்டனர்.
நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு இரவில் காய்கறிகளை கொண்டு வந்து இறக்கிய லாரிகள், நயினார்குளம் கிழக்கு கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகாலை நேரத்தில் கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிச்சென்ற லாரிகள் கேரளா மாநில எல்லையான புளியரை சோதனை சாவடி பகுதியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சென்ற லாரிகளும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தன. மாலை 6 மணிக்கு பிறகு லாரிகள் போக்குவரத்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மினிலாரிகள், லோடு ஆட்டோக்கள் மூலம் சரக்குகள் வழக்கம் போல் கையாளப்பட்டன.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ரெயிலில் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் ரெயில் பெட்டிகளில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டன. ஆனால் லாரிகள் இயக்கப்படாமல் ரெயில் நிலையத்தில் சரக்குகளை கையாளும் 6-வது பிளாட்பார பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த லாரிகள் மாலை 6 மணிக்கு பிறகு அரிசி ஆலைகளுக்கு புறப்பட்டு சென்றன.
Related Tags :
Next Story