நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரியால் பரபரப்பு


நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரியால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Sep 2019 10:30 PM GMT (Updated: 9 Sep 2019 11:06 PM GMT)

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பட்டதாரி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பி.ஏ. பட்டதாரியான இவர் மற்றும் அவருடைய நண்பர் பெரியதுரையிடம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ஒருவர், வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. சண்முகசுந்தரம் அந்த பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை. இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சண்முகசுந்தரம், நேற்று தனது நண்பர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினார்கள். மேலும், அவருடைய உடலில் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் சண்முகசுந்தரத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 4 பேர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவத்துக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இருந்தும் சண்முகசுந்தரம் உள்ளே சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story