மானூர் அருகே, தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


மானூர் அருகே, தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Sep 2019 10:30 PM GMT (Updated: 9 Sep 2019 11:06 PM GMT)

மானூர் அருகே தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 54). மாடு மேய்க்கும் தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (35). மரம் வெட்டும் தொழிலாளி.

நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அம்மன் கோவில் அருகே முருகனுக்கும், முத்துராமலிங்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம் தான் வைத்திருந்த அரிவாளால் முருகனை வெட்டிக்கொலை செய்தார். பின்னர் முத்துராமலிங்கம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முத்துராமலிங்கத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊருக்கு அருகே உள்ள குளத்து பகுதியில் பதுங்கி இருந்த முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

கைதான முத்துராமலிங்கம் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முருகனும், எனது மனைவி துர்க்கா தேவியும் தினமும் ஒன்றாக மாடு மேய்த்து வருவார்கள். இதனால் 2 பேருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக நினைத்தேன். இதனால் முருகன் மீது ஆத்திரத்தில் இருந்த நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு முருகனின் மனைவி ஆறுமுகத்தம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு, அவர் மீது விழுந்தேன். இதனை முருகன், ஊரில் உள்ளவர்களிடம் கூறி என்னை கண்டித்தார்.

இதனால் எனக்கு முருகன் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையே முருகன், ஆறுமுகத்தம்மாள், இவர்களுடைய மகன் குமார், முருகனின் தம்பி ஆறுமுகப்பெருமாள், அவருடைய மனைவி ராமலட்சுமி ஆகியோர் ஊரில் உள்ள கொம்புமாடசாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்.

அம்மன் கோவில் அருகே சென்றபோது நான் முருகனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டேன். அப்போது நான் வைத்திருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பியோடி ஊருக்கு அருகே உள்ள குளத்து பகுதியில் பதுங்கி இருந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருகனின் உடல் பிரேத பரிசோதனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. அப்போது முருகனின் பெற்றோர் மற்றும் மதவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் நேற்று ஆஸ்பத்திரிக்கு முன்பு திரண்டனர். அவர்கள் கூறுகையில், கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். முருகனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து பாளையங்கோட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணை தாசில்தார் மாரிராஜ் மற்றும் போலீசார் முருகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து முருகனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மாலையில் வேன் மூலம் முருகனின் உடலை மதவக்குறிச்சிக்கு கொண்டு சென்றனர்.

Next Story