தக்கலை அருகே ஆற்றில் குளிக்க சென்ற என்ஜினீயர் கதி என்ன?
தக்கலை அருகே ஆற்றில் குளிக்க சென்ற என்ஜினீயர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை உறவினர்கள் தேடி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ், ஆசிரியர். இவருடைய மனைவி ஷகிலா, ஆசிரியை. இவர்கள் இருவரும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு சஜித் (வயது 23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சஜித் சென்னையில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். ஷகிலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை பெற அவர் மூலச்சலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்தார். அவருடன் சஜித்தும் 7 மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தார்.
நேற்று காலை சஜித் வழக்கம் போல் சரல்விளை பகுதியில் உள்ள வள்ளியாற்றில் குளிக்க சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சஜித் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வள்ளியாற்றுக்கு வந்து அவரை தேடினார்கள். அதே சமயம் தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஆற்றில் இறங்கி சஜித்தை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவர் கதி என்னவென்றும் தெரியவில்லை. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை நிறுத்தினார்கள். அதன்பிறகு உறவினர்கள் ஆற்றில் இறங்கி சஜித்தை தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story