சபரிமலையில் நிறைபுத்தரிசி திருவிழா, பண்பொழியில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டன
சபரிமலை அய்யப்பன் கோவில் நிறைபுத்தரிசி திருவிழாவிற்காக பண்பொழியில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டன.
தென்காசி,
கேரள மாநிலத்தில் ஆண்டு தோறும் மலையாள வருட பிறப்பிற்கு முன்பு அனைத்து கோவில்களிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் நிறைபுத்தரிசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் அறுவடை செய்யப்படும் முதல் நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபடுவது ஐதீகம். இந்த விழாவிற்காக ஆண்டு தோறும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவிற்கான நெற்கதிர்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டன.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் கேரள மாநிலம் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்கள் உள்ளது. இங்குள்ள நிலப்பரப்பில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சபரி மலையில் நடைபெறும் நிறைபுத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர்களுடன் 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினரும், அய்யப்பன் ஆபரண பெட்டி வரவேற்பு குழுவினரும் இணைந்து கேரள மாநிலத்திற்கு எடுத்து சென்றனர்.
நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்திற்கு கோட்டை வாசலில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் முன் தமிழக-கேரள பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு சபரிமலைக்கு நெற்கதிர் வாகனத்தை அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் தேவசம்போர்டு பிரசிடென்ட் பத்மகுமார், சங்கரதாஸ், துணை ஆணையாளர் கிருஷ்ணகுமார் வாரியர், சிறப்பு அதிகாரி சதீஷ்குமார், திருவாபரண வரவேற்பு கமிட்டி குழு தலைவர் ஏ.சி.எஸ். ஹரிஹரன், பா.ஜ.க. தென்காசி நகர தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) காலை நிறை புத்தரிசி விழாவில் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜைக்கு பின்பு பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story