கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 19 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 8:16 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குளச்சல்,

கன்னியாகுமரி கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், இதனால், ஆழ்கடலில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய கடல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த தகவல் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அந்தந்த பகுதி பங்குதந்தையர்கள் மூலமாகவும், மீனவர் சங்கங்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை முதல் கன்னியாகுமரி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன. இதனால், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசார் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதவாறு கண்காணித்தனர்.

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு இரவு கரை திரும்புவார்கள். நேற்று கடல்சீற்றத்துடன் காணப்பட்டதால் விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு தினமும் காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து நடைபெறும். நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் வழக்கமான நேரத்தில் படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், காலையில் படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காலை 10 மணியளவில் கடல்சீற்றம் ஓரளவு தணிந்தது. இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பின்பு சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 200–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். மேற்கு கடல்பகுதியில் தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கட்டுமர மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்தனர்.

குளச்சல் பகுதியில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் மேடான பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். இதுபோல், மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 

Next Story