பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த புதிய திட்டம் பால் பாக்கெட் விலை 50 பைசா அதிகரிக்கும் சட்டசபையில் மந்திரி தகவல்
பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த புதிய திட்டமாக பால் பாக்கெட் விலையை 50 பைசா அதிகரித்து, காலி பாக்கெட்டுகளை ஒப்படைத்தால் அந்த தொகை திரும்ப வழங்கப்படும் என்று சட்டசபையில் மந்திரி ராம்தாஸ் கதம் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய சட்டசபையில் நேற்று பிளாஸ்டிக் தடை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி ராம்தாஸ் கதம் பதிலளித்து கூறியதாவது:-
பிளாஸ்டிக் தடையில் இருந்து பால் பாக்கெட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் மாற்று ஏற்பாடு செய்யும் வரை விலக்கு தொடரும். ஆனால் விலக்கு காரணமாக பால் பாக்கெட்பைகள் குப்பை கழிவுகளாக வீசப்படுகிறது. இதை தடுக்க புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
கூடுதலாக 50 பைசா
அதன்படி, பால் வினியோகம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் பாக்கெட் ஒன்றுக்கு கூடுதலாக 50 காசு வசூலிப்பார்கள். பாலை பயன் படுத்திய பிறகு, காலி பாக்கெட்டை வினியோகம் செய்பவர்களிடம் கொடுத்தால் அந்த 50 காசுவை திரும்ப ஒப்படைத்து விடுவார்கள். இந்த திட்டத்துக்கு பால் வினியோகஸ்தர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிசிங் ரதோட் எழுப்பிய கேள்விக்கு மந்திரி ராம்தாஸ் கதம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “மாநிலத்தில் 6 ஆயிரத்து 369 கடைகள் பிளாஸ்டிக் தடையை மீறி உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 50 மைக்ரான் தடிமனுக்கு அதிகமான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்படுகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story