வெள்ளலூர் நாடு கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு: 62 கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம்


வெள்ளலூர் நாடு கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு: 62 கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2019 5:00 AM IST (Updated: 20 Jun 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே மேலூர் வெள்ளலூர் நாடு கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராம மக்கள் ஓரிடத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர், உறங்கான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அங்குள்ள காவல் தெய்வங்களான ஏழைகாத்த அம்மன், வல்லடிகாரர் கோவில் உள்ளிட்டவற்றை இந்துசமய அறநிலையத்துறையினர் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த வெள்ளலூர் நாட்டு மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுசம்பந்தமாக வெள்ளலூர் நாட்டை சேர்ந்த 62 கிராம மக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமானோர் வெள்ளலூரில் ஒன்றுகூடி அங்கிருந்து பஸ்கள், வேன்கள் என 600 வாகனங்களில் மதுரை சென்று இந்துசமய அறநிலையத்துறை உயர் அதிகாரியிடம் நேரடியாக சந்திப்பது என்று முடிவு செய்திருந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அழைப்பு விடுத்தனர்.

அதன்படி நேற்று 62 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெள்ளலூரில் குவிந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெள்ளலூர் நாடு கோவில்களை அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதுடன், எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி தர்ணாவிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். முன்னதாக 62 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மதுரை சென்று அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பதற்காக வாகனங்களை வரவழைத்து கிராம மக்கள் புறப்பட தயார் நிலையில் இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ், தாசில்தார் சிவகாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கிராம அம்பலக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து கிராம மக்கள் புறப்பட தயாரானார்கள்.

அனைவரும் மதுரை சென்றால் போராட்டம் வலுப்பெறும் என்பதால், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் வெள்ளலூருக்கே வருவதாக தெரிவித்தனர். இதற்கிடையே கிராம மக்களின் தொடர் எதிர்ப்பு கோஷத்தால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. பெண்கள் சிலர் அருள்வந்து ஆடினர்.

இந்துசமய அறநிலையத்துறை மதுரை உதவி ஆணையர் விஜயன், மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், கோட்டாட்சியர் சிவகாமி, கூடுதல் சூப்பிரண்டுகள் வனிதா, நரசிம்மவர்மன் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் வெள்ளலூருக்கு வந்தனர். அவர்கள் வெள்ளலூர் நாடு அம்பலக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது "கோவிலின் நிர்வாக கமிட்டியில் கிராமத்தினர் இருப்பார்கள். ஆனால் கோவிலின் வரவு-செலவுகளை அறநிலையத்துறை மேற்கொள்ளும்" என உதவி ஆணையர் கூறியதால் அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும், முன்பு இருந்தபடியே கிராம மக்களே நிர்வகிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராம அம்பலக்காரர்கள், இனிவரும் காலங்களில் கையகப்படுத்தும் முயற்சியை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை மனுவினை உதவி ஆணையரிடம் வழங்கினர். இதையடுத்து வெள்ளலூரில் கூடியிருந்த 62 கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து தங்களது ஊர்களுக்கு சென்றனர்.

Next Story