மின் கணக்கீட்டு அட்டையில் மத பிரசாரம்: மின்வாரிய அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி


மின் கணக்கீட்டு அட்டையில் மத பிரசாரம்: மின்வாரிய அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 4 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டாவில் மின் கணக்கீட்டு அட்டையில் மதபிரசாரம் செய்ததை கண்டித்து இந்து முன்னணியினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு, 

மின்வாரிய அலுவலகங்களில் மின் கணக்கீட்டு அட்டை நன்கொடையாக வழங்குபவர்கள் தங்களது வர்த்தக விளம்பரங்களை வெளியிட்டு கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. இதனை பயன்படுத்தி பள்ளிகொண்டா டோல்கேட் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான வாசகங்களும், படமும் இடம் பெற்றுள்ளன. இந்த மின் கணக்கீட்டு அட்டைகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இது அந்த மத மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகே‌‌ஷ் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, சரவணன் மற்றும் போலீசார் நேற்று அலுவலகத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் ராமாபுரம் ரோட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக அலுவலகம் அருகே வந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சீனிவாசன் அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்தார். அப்போது இந்து முன்னணியினர் அவரிடம், அதிகாரிகள் வேண்டும் என்றே மின் கணக்கீட்டு அட்டையில் மத பிரசாரம் செய்கின்றனர். அச்சிட்டவர்கள் மீதும், வினியோகம் செய்த மின் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது உதவி செயற் பொறியாளர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story