கடலூர் துறைமுகம் அருகே சுவர் இடிந்து துப்புரவு ஊழியர் பலி


கடலூர் துறைமுகம் அருகே சுவர் இடிந்து துப்புரவு ஊழியர் பலி
x
தினத்தந்தி 14 April 2019 3:30 AM IST (Updated: 14 April 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகம் அருகே சுவர் இடிந்து விழுந்து துப்புரவு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் குட்டக்கார தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 57). இவர் கடலூர் பெருநகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது கழிப்பறையையொட்டி இருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து பழனிசாமியின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் அவர் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். ஆனால் சுற்றுச்சுவர் பெரிதாக இருந்ததால் அதை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தி, உள்ளே இறந்து கிடந்த பழனிசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கடலூர்முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான பழனிசாமியின் மனைவி கஸ்தூரி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் இறந்தார். இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து பழனிசாமியும் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story