தஞ்சை மாவட்டத்தில், ஒரே நாளில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ கோடி பறிமுதல்


தஞ்சை மாவட்டத்தில், ஒரே நாளில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2019 4:29 AM IST (Updated: 23 March 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? விடுதிகள், திருமண மண்டபங்களில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையம் முன்பு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர், வேன் அருகே சென்று வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வேனில் பணம் இருப்பதும், ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக அந்த பணம் கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்தது.

ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் அந்த வேனை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேபோல தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் வந்த மற்றொரு வேனையும் இந்த குழுவினர் வழிமறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த வேனிலும் பணம் இருப்பதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வேனையும் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பணத்துடன் 2 வேன்கள் பிடிப்பட்டதை அறிந்த தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) விஜயலட்சுமி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தஞ்சையில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருந்து ரூ.1 கோடியே 29 லட்சத்தை ஒரு வேனில் எடுத்து கொண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக தனியார் ஒப்பந்த ஊழியர்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது.

அதேபோல தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்து 294-யை அவர்களது பெயரில் தனியார் வங்கிகளின் கணக்கில் வரவு வைப்பதற்காக தனியார் ஒப்பந்த ஊழியர்கள், வேனில் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. 2 வேன்களிலும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லப்பட்டதால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் எந்திரம் மூலம் பணம் எண்ணப்பட்டு, சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறும்போது, வேனில் வந்தவர்களுக்கும், பணத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததாலும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்தால் திட்ட அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி பரிசீலனை செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தனியார் நிறுவன உரிமையாளர்களின் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால் வருமான வரித்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சையை அடுத்த ஈச்சங்குடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் கலைச்செல்வி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர், போலீஸ்காரர்கள் பாஸ்கர், பிரான்சிஸ் ஆகியோர் அந்த வழியாக வந்த கார், வேன் போன்ற வாகனங்களை வழிமறித்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை குழுவினர் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து வேனில் வந்தவர்களிடம் விசாரித்தபோது வேனில் ரூ.17 லட்சம் இருப்பதாகவும், ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதனால் ரூ.17 லட்சத்தை அலுவலர் கலைச்செல்வி பறிமுதல் செய்து திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Next Story