கர்நாடகத்தில் மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் எச்சரிக்கை


கர்நாடகத்தில் மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2019 4:30 AM IST (Updated: 18 Feb 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் எச்சரித்துள்ளார்.

விஜயாப்புராவில் நேற்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது...

மாநிலத்தில் சில அரசியல் கட்சியினர், மாணவர்கள், பிற தனியார் அமைப்பினர் மதவாதத்தை தூண்டும் விதமாகவும், தேச விரோத செயல்களை தூண்டும் நோக்கத்துடனும் முகநூல்(பேஸ்புக்), வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை சகித்து கொள்ள முடியாது. மதவாதத்தை தூண்டுபவர்களை கண்டு கொள்ளாமல், இந்த அரசு வேடிக்கை பார்க்கும் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

மதவாதத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில், எந்த விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நமது ராணுவத்திற்கு எதிராக சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் எக்காரணத்தை ெகாண்டும் மதவாதத்தை தூண்டும் செயல்களிலோ அல்லது ராணுவத்திற்கு எதிராகவோ தவறாக தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.

சகித்து கொள்ள முடியாது

மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, மதவாதத்தை தூண்டும் விதமாக பேசி வருவதாக நீங்கள்(நிருபர்கள்) கேட்கிறீர்கள். மதவாதத்தை தூண்டுபவர்கள், சமூக நீதிக்கு எதிராக பேசுபவர்கள் சட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டு தான் வருகிறார்கள். சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீஸ் துறையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக முகநூலில் கருத்துகள் பதிவு செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மற்றும் எழுத்தாளர் கலபுரகி கொலை வழக்குகளை சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். சரியான பாதையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. விஜயாப்புரா மாவட்டத்தில் ஏரிகள் சீரமைக்கும் பணிகள் மற்றும் ஏரிப்பகுதிகளில் பூங்கா அமைக்கும் பணிகள் ரூ.11 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் அனைத்தும் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையும்.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

Next Story