ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம்


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:06 AM IST (Updated: 28 Dec 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜல்லிக்கட்டு நடத்தும் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், ஜல்லிக்கட்டு போட்டியை திறந்த வெளியில் நடத்துதல் வேண்டும். ஜல்லிகட்டு நடத்தும் இடத்தில் காளைகள் கட்டும் பகுதிகள், காளைகள் உடல் பரிசோதனை செய்யும் பகுதி, காளைகள் வாடிவாசல் பகுதி, காளைகள் அடைபடும் பகுதி, பார்வையாளர்கள் பகுதி என பிரிக்கப்பட வேண்டும். மாடு பிடி வீரர்கள், காளைகளின் விவரங்கள் தெரிவிக்க வேண்டும். காளைகளுக்கு ஊக்கமருந்து, போதை பொருட்கள் வழங்குவது தவிர்த்தல் வேண்டும். மேலும், காளைகள் ஓடும் இடம் 15 சதுர மீட்டருக்கு தேங்காய் நார்கள் மற்றும் 2 அடுக்கு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மாடுபிடி வீரர்கள் சீருடை அணிந்திருத்தல் வேண்டும். ஒரு காளையை ஒருவர் மட்டுமே தழுவுதல், இதர வகைகளில் காளைகளை வீரர்கள் துன்புறுத்தக்கூடாது. மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமம், இடம், நாள், ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பாளர்களின் விவரம் முழு முகவரியுடன், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகளின் எண்ணிக்கை, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தின் முழு விளக்க வரைபடம் இணைக்கப்பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை அணுகி ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கென்னடி, மோதன்தாஸ் மற்றும் மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) முகமதுஆசிப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story