விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஒரு லட்சம் வாக்குகள்
கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ‘விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இங்கு நடைபெற்ற 10 சட்டமன்ற தேர்தல்களில் 8 முறை அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தந்து உள்ளோம். இனியும் நிறைவேற்றித்தர கடமைப்பட்டு உள்ளோம்.
புரட்சி தலைவி ஜெயலலிதா வழங்கிய நலத்திட்டங்களை பெறாத வீடுகளே தமிழகத்தில் இல்லை. நாம் வீடுதோறும் சென்று, அ.தி.மு.க. அரசு செயல்படுத்திய மகத்தான திட்டங்களை குறித்து தெரிவித்து, ஓட்டு கேட்க வேண்டும். விளாத்திகுளம் தொகுதியில் வார்டு வாரியாக சுமார் 14 ஆயிரம் வாக்குசாவடி குழு முகவர்களை நியமித்து, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்‘ என்றார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ
கூட்டத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ‘திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் இயற்கையானது. ஆனால் மற்ற 18 தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தல் செயற்கையானது. இது அ.தி.மு.க.வுக்கு துரோகம் புரிந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற இடைத்தேர்தலில் எதிரிகளை மட்டுமல்ல, துரோகிகளையும் சேர்த்து வீழ்த்த வேண்டும்‘ என்றார்
அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதனால்தான் அவரை மீண்டும் முதல்-அமைச்சராக மக்கள் தேர்ந்து எடுத்தனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சிலரது துரோகத்தால் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. வருகிற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story