கொலை வழக்குகளில் தலைமறைவு: திண்டுக்கல் கோர்ட்டில் பிரபல ரவுடி மோகன்ராம் ஆஜர்


கொலை வழக்குகளில் தலைமறைவு: திண்டுக்கல் கோர்ட்டில் பிரபல ரவுடி மோகன்ராம் ஆஜர்
x
தினத்தந்தி 16 Oct 2018 3:00 AM IST (Updated: 15 Oct 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்குகளில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி மோகன்ராம் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாகல்புதூரை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது 36). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில், 10 கொலை வழக்குகள் அடங்கும். திண்டுக்கல்லில் 4 கொலை வழக்குகளும், தமிழகத்தின் பிற போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும் உள்ளன.

திண்டுக்கல்லில் சிசர்மணி, சீட்டிங் ஆனந்த், குமார் ஆகியோரை கொலை செய்த வழக்குகளில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மோகன்ராமை, திண்டுக்கல் வடக்கு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதேபோல் கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரை கொன்ற வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கோவை போலீசார் அவரை தேடினர்.

இதற்கிடையே மும்பையில் பதுங்கி இருந்த மோகன்ராமை கடந்த 8-ந்தேதியன்று போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மோகன்ராமை, திண்டுக்கல்லில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக, கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு போலீசார் அவரை அழைத்து வந்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.

மோகன்ராமின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தவர் கணேசன் என்ற நரைமுடி கணேசன். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் நரைமுடி கணேசன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக மோகன்ராம் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு தீபா உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு மோகன்ராம் கோவை மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். 

Next Story