நீலகிரியில் மருத்துவக்கல்லூரி தொடங்க பரிந்துரை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்


நீலகிரியில் மருத்துவக்கல்லூரி தொடங்க பரிந்துரை - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 1 Oct 2018 4:45 AM IST (Updated: 30 Sept 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் மருத்துவக்கல்லூரி தொடங்க பரிந்துரைக்கப்படும் என்று குன்னூர் அருகே நடந்த நலவாழ்வு மைய திறப்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வட்டார நலவாழ்வு மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

ஒரு நாடு அனைத்து துறையிலும் முன்னேற வேண்டுமென்றால் நாட்டு மக்கள் நல்ல உடல் நலத்திலும், மன நிலையிலும் இருக்க வேண்டும். இதனை பிரதமர் கருத்தில் கொண்டு மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வருகிற 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்த தர தீவிரமாக இருக்கிறார். மேலும் வீடுகளில் அடுப்பு எரிக்கும் பெண்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 60 ஆண்டுகள் வரை நாட்டில் கழிப்பிடங்களின் எண்ணிக்கை 4 கோடியோக இருந்து. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 8 கோடியாக உயர்ந்துள்ளது.

ஏழை மக்கள் தங்களது சேமிப்பில் குறிப்பிட்ட தொகையை சிகிச்சைக்காக செலவழிக்கின்றனர். மேலும் அதிக பணம் இல்லாததால் தரமான சிகிச்சை பெற முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் சிகிச்சைக்காக வழங்கும் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் நீலகிரியில் 1 லட்சத்து 64 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். நலவாழ்வு மையம் நமது மருத்துவமனை என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல மாட்டார்கள். அடுத்தகட்டமாக நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க, தமிழக முதல்–அமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும். அதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் உதவிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தேயிலை வாரிய துணைத்தலைவர் குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுகாதார பணிகளின் துணை இயக்குனர் பொற்கொடி வரவேற்றார். முடிவில் குன்னூர் வட்டார மருத்துவ அலுவலர் அஜரத் பேகம் நன்றி கூறினார்.

விழாவிற்கு பிறகு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் தேர்வு செய்வதில் தான் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். பா.ஜனதா– அ.தி.மு.க. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் தான் கவனிக்க வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி மூலம் வளர்ச்சி திட்டங்களை தாமதமாக தமிழக அரசுமேற்கொள்கிறது. மக்களின் நலன்கருதி அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும். பெட்ரோல்– டீசல் விலையை குறைக்கக்கூடாது என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. கச்சா எண்ணெய் விலை மாறுதல், பல நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விலை நிர்ணயம் செய்ய தனி அமைப்பு உள்ளது. பெட்ரோல்– டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசால் முடியாது. ஏனெனில் அதற்கென்று உள்ள குழு தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேலின் செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியது. அவரை போல உற்சாகமாக வேலை செய்யும் அதிகாரிகளை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். தமிழக–கேரள எல்லை மற்றும் கர்நாடகா– ஆந்திர எல்லைகளில் தீவிரவாதிகள் ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. எல்லைப்பகுதிகளில் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இதுபோன்று உள்தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story