நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 572 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார்


நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 572 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Sept 2018 3:30 AM IST (Updated: 30 Sept 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 572 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார்.

நெல்லை, 

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 572 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 33-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் சித்தார்தன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஐசக்சாலமோன் ஜெபமணி ஆண்டு அறிக்கை படித்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 572 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன. விழாவில் நீதிபதி சுவாமிநாதன் பேசியதாவது:-

பெருமை பட வேண்டும்

நீங்கள் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து பட்டம் வாங்குவதற்கு பெருமை பட வேண்டும். பிளஸ்-2 வரை மாணவர்கள் அனைவருமே தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பெற்றோர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். உயர் கல்வி என்று வரும் போது மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் அரசு கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். தற்போது என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் பொறியியல் பட்டப்படிப்புக்கு எந்த காலத்திலும் வரவேற்பு இருக்கிறது. நீங்கள் மனம் தளராமல் இருக்க வேண்டும்.

முன்மாதிரியாக...

நீங்கள் முன்னேறுவதற்கு யாரையாவது முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் தான் நீங்கள் வளர்ச்சி பெற முடியும். கடந்த 1960-ம் ஆண்டு பாம்பன் பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மீண்டும் புதுப்பித்து கட்டும் பணியை என்ஜினீயர் ஸ்ரீதரன் என்பவரிடம் கொடுத்தார்கள். அவர் இந்த பணியை எப்படி முடிக்கப்போகிறோமோ? என்று தயங்கி கொண்டு இருந்தார். ஸ்ரீதரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது பாம்பன் பாலம் தூண்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாலும், கடலுக்குள் தான் இருக்கும். அவற்றை தேடி கண்டுபிடித்து விட்டால் விரைவில் பாம்பன் பாலத்தை கட்டி விடலாம் என முடிவு செய்தார்.

அதேபோல் அவர் மீனவர்களின் உதவியுடன் பாலத்தின் தூண்களை கண்டுபிடித்து விரைவில் பாலத்தை கட்டினார். அதேபோல சிறந்த சாதனை செய்த என்ஜினீயர்களை தங்கள் வாழ்வில் முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் சாதனை படைத்து இந்த கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் துறை தலைவர்கள் லதா, பிரகாஷ், பால்கனி, விஜயராகவன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியை ஞானசுந்தரி செய்து இருந்தார்.

Next Story