ஊட்டி –இத்தலார் சாலையில் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுமா? தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை


ஊட்டி –இத்தலார் சாலையில் மண் சரிவு ஏற்படுவது தடுக்கப்படுமா? தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 Sept 2018 4:00 AM IST (Updated: 1 Sept 2018 7:17 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக ஊட்டி–இத்தலார் சாலையில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி–கூடலூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. ஊட்டி கோடப்பமந்து அம்பேத்கர் காலனியில் குடியிருப்புகளையொட்டி மண் சரிவு ஏற்பட்டது. மரங்கள் விழுந்ததில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. ஆகஸ்டு மாத தொடக்கத்தில் பெய்த மழை சிறிது நாட்களில் ஓய்ந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஊட்டி– இத்தலார் சாலை முத்தோரை பகுதியில் சாலையோரத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். ஊட்டியில் அவ்வப்போது சாரல் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி மண்சரிவு ஏற்பட்டால் சாலை துண்டிக்கப்படும். மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவார்கள். எனவே மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களை கண்டறிந்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை காரணமாக சாலையோரங்களில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக காணப்படுகிறது. மீண்டும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. ஊட்டி– இத்தலார் சாலையில் செடிகள் வளர்ந்த இடத்தில் பிடிப்பு இல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மண் அவ்வப்போது பெயர்ந்து விழுந்துக்கொண்டே இருக்கிறது.

அந்த மண் அகற்றப்பட்டாலும், தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். ஊட்டி–இத்தலார் சாலையில் ஊட்டியில் இருந்து நஞ்சநாடு, எமரால்டு, மஞ்சூர், அவலாஞ்சி, உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகிறது. மேலும் அந்த வழியாக முள்ளிக்கொரை, முத்தோரை, நஞ்சநாடு பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட், பீட்ரூட் போன்றவற்றை கழுவி சுத்தப்படுத்துவதற்காக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சரக்கு வாகனங்கள், லாரிகள் செல்கின்றன.

அதைத்தொடர்ந்து ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கினால், அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஊட்டி– இத்தலார் சாலையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். அதோடு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story