நாம் ஏன் கனவு காண்கிறோம்? காரணம் சொல்கிறது புதிய ஆய்வு


நாம் ஏன் கனவு காண்கிறோம்? காரணம் சொல்கிறது புதிய ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2018 1:16 PM IST (Updated: 30 July 2018 1:16 PM IST)
t-max-icont-min-icon

‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்று பாடினார் மகாகவி பாரதியார்.

‘கனவு காணுங்கள், அந்த கனவுகளை எண்ணங்கள் ஆக்குங்கள். பிறகு அந்த எண்ணங்களை செய்கை ஆக்குங்கள்’ என்று சொன்னார் இந்தியாவின் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்.

இப்படி, தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் ஒரு பிரபல கவிஞரும், உலகம் போற்றும் ஏவுகணை விஞ்ஞானியும் கனவு குறித்து பேசுவதற்கு காரணம், கனவுகள் நம் வாழ்க்கையில் இன்றியமையாதவை என்பதே.

கனவு காணுதல் என்பது ஒரு நினைவை அல்லது எண்ணத்தை மீண்டும் மீண்டும் சிந்தனையில் வைத்து அதனை செயல்படுத்துவது அல்லது நனவாக்குவதை குறிப்பிடுகிறது. ஆனால், இது தவிர நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றொரு வகை கனவு உண்டு. அது நாம் இரவில் கண்ணயர்ந்து நன்றாக உறங்கும்போது உருவாகும் கனவுகள்.

மனிதன் தன் வரலாற்றை பதிவு செய்யத்தொடங்கிய காலம்தொட்டு இன்றுவரை, கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறான். அந்த ஆய்வுகளின் அடிப்படையில், கனவு என்பது என்ன என்று அறிவியல் ரீதியாகப் பார்த்தால், நாம் விழித்துக்கொண்டு இருக்கும்போது நமக்கு ஏற்படும் அனுபவங்களின் பிரதிபலிப்புதான் கனவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆனாலும், கனவு என்றால் என்ன என்பதை திட்டவட்டமாக இன்னதுதான் என்று இன்றுவரை எந்த ஆய்வாளராலும் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. இருந்தபோதும், கனவு என்றால் என்ன என்பதை அறிவியல்பூர்வமாக கண்டறியும் ஆய்வுப் பயணம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த வரிசையில், கனவு என்றால் என்ன என்பதை தக்க அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும் என்கிறது இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று. உளவியலாளர் மார்க் ப்லாக்ரோவ் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள்படி பார்த்தால், நாம் விழித்திருக்கும்போது அனுபவிக்கும் நினைவுகளையும், உணர்ச்சிகளையும் நாம் நினைவுகளாக சேமிக்க உதவும் ஒரு உயிரியல் நிகழ்வுதான் கனவு காணுதல் என்று கூறப்படுகிறது.

கனவு என்பது நாம் விழிப்புடன் இருக்கும் வாழ்க்கைத் தருணங்களுடன் தொடர்புடையதே எனும் கருத்தை உலகப்புகழ்பெற்ற உளவியலாளர் சிக்மன்ட் பிராய்டு கடந்த இரு பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கூறியிருக்கிறார். கனவுகளை சிக்மன்ட் பிராய்டு அவர்கள் ‘நாளின் எச்சங்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கனவுகளை ஆய்வு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனென்றால், தனக்கு என்ன நேர்கிறது என்பதை அந்த தருணத்தில் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் மூளையில் தான் கனவுகள் தோன்றுகின்றன.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி கண்டிருக்கும் இந்த காலத்தில் கூட, ஒருவருடைய மனதில் தோன்றும் கனவுகளை நேரடியாக பார்த்து, பதிவு செய்யக்கூடிய தொழில்நுட்பக் கருவிகள் இன்னும் கண்டறியப்படவில்லை. மாறாக, கனவு காண்பவர்களின் கனவுகள் தொடர்பான நினைவுகளை சேகரிப்பதன் மூலமாகவே கனவுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதுபோலவே, தங்களுடைய கனவுகளை துல்லியமாக நினைவு கூறும் திறமையுள்ள சுமார் இருபது மாணவ தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய ஆய்வில், மாணவர்கள் தாங்கள் விழித்துக்கொண்டு இருக்கும்போது விரும்பி செய்த முக்கியமான செயல்கள் அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

சுமார் பத்து நாட்கள் தொடர்ந்த இந்த தினசரி நிகழ்வுகளின் பதிவுகள் அனைத்தும் பின்னர் அவர்களுடைய கனவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. ஆச்சரியமாக, மாணவர்களின் நாளின் நிகழ்வுகள் அவர்களுடைய (ராபிட் ஐ மூவ்மென்ட் ஸ்லீப்/Rapid Eye Movement sleep) என்று அழைக்கப்படும் ஆழ்ந்த உறக்கத்துடனும், மற்றும் நினைவுகளுடன் தொடர்புடைய மூளையின் ‘தீட்டா அலை’களுடன் தொடர்புடையதாக இருந்ததும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், சலிப்பு தட்டும் நிகழ்வுகள் தவிர்த்து, விழிப்புடன் இருக்கும் நாளின்போது நடந்த மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மாணவர்களின் கனவுகளில் தோன்றியதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.

ஆக மொத்தத்தில், விழிப்புடன் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகளுக்கும், கனவுகளுக்கும் மற்றும் நினைவுகளை பராமரிக்கும் மூளையின் தீட்டா அலைகளுக்கும் தொடர்பு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Next Story