கடற்கரை ரெயில் நிலையத்தில் ‘திடீர்’ சிக்னல் கோளாறு: சென்னையில், மின்சார ரெயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு


கடற்கரை ரெயில் நிலையத்தில் ‘திடீர்’ சிக்னல் கோளாறு: சென்னையில், மின்சார ரெயில் சேவை 3 மணி நேரம் பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2018 5:12 AM IST (Updated: 22 July 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கடற்கரை ரெயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவில் ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறால் சென்னையில் மின்சார ரெயில் சேவை 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினந்தோறும் சராசரியாக 400-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமாகவும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு

கடற்கரை ரெயில் நிலைய கட்டுப்பாட்டு பிரிவில் நேற்று காலை 9.10 மணி அளவில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் எங்கு செல்கின்றன? ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கும் ரெயில்கள் எவை? போன்ற விவரங்கள் தெரியாமல் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.

கட்டுப்பாட்டு பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடற்கரை-தாம்பரம் இடையேயான ரெயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு எற்பட்டது. இதனால் உடனடி நடவடிக்கையாக அனைத்து ரெயில்களையும் ஆங்காங்கே நிறுத்துமாறு அந்தந்த ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் கார்டுகளுக்கு அறிவிப்பு தரப்பட்டது.

ரெயில்கள் நிறுத்தம்

இதையடுத்து காலை 9.14 மணி முதல் கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை கடற்கரைக்கு வரும் (எல்லா வழித்தடங்களிலும்) அனைத்து மின்சார ரெயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். நீண்ட நேரம் ஆனதால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியாமல் திண்டாடினர். மேலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியவர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும் தவித்தனர்.

மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் இறங்குவதற்கு வழியின்று வயதானவர்கள், பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். ரெயில் கள் நிறுத்தப்பட்டது ஏன்? என்பதே நீண்ட நேரத்துக்கு பின்பு தான் பயணிகளுக்கே தெரியவந்தது. வாலிபர்கள் மட்டும் உடனடியாக ரெயில்களில் இருந்து கீழே குதித்து வெளியே சென்றனர்.

3 மணி நேரம் பாதிப்பு

கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காலை 11.57 மணிக்கு சரிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உரிய சிக்னல்கள் கிடைத்ததை தொடர்ந்து, பகல் 12.05 மணிக்கு ரெயில்கள் புறப்பட அனுமதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த ரெயில்கள் புறப்பட்டன. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த பறக்கும் மின்சார ரெயில்களும் கடற்கரைக்கு வர தொடங்கின.

இந்த திடீர் பிரச்சினை காரணமாக நேற்று காலை 9.10 மணி முதல் பகல் 12.05 மணி கிட்டத்தட்ட 3 மணி நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையான தவிப்புக்கு ஆளாயினர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

பயணிகள் தஞ்சம்

சிக்னல் கோளாறு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான் என்றாலும், மின்சார ரெயில்களை ஆங்காங்கே நிறுத்தியது தவறு தான். முடிந்தவரையில் அருகில் உள்ள ரெயில் நிலையங்களிலாவது ரெயில்களை நிறுத்தி இருக்கலாம். நடுவழியில் நிறுத்தப்பட்டதால் நாங்கள் எங்கும் இறங்க முடியாமல் ரெயிலிலேயே தஞ்சம் அடைய வேண்டியதாய் போனது.

ரெயில் நிறுத்தப்பட்டதற் கான அறிவிப்பும் எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை. இன்றைய (நேற்று) தினம் பெரும்பாலானோர் தங்கள் அலுவலகங்களுக்கு தாமதமாகத்தான் செல்ல செல்லவேண்டி நிலை ஏற்பட்டது. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடும் அதிருப்தி

பராமரிப்பு காரணமாக நேற்று கடற்கரை-தாம்பரம் இடையே பல மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. எனவே நேற்று குறைந்த அளவிலான மின்சார ரெயில்களே இயக்கப்பட்டன.

இதற்கிடையில் நேற்று ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரெயில் சேவை 3 மணி நேரம் முற்றிலும் முடங்கியது, பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Next Story