மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிப்பதில் தண்டையார்பேட்டை மண்டலம் முதல் இடம்


மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிப்பதில் தண்டையார்பேட்டை மண்டலம் முதல் இடம்
x
தினத்தந்தி 6 July 2018 4:45 AM IST (Updated: 6 July 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்காத குப்பையில் இருந்து உரம் தயாரிப்பதில் தண்டையார்பேட்டை மண்டலம் முதல் இடம் வகிப்பதாக மண்டல அதிகாரி தெரிவித்தார்.

பெரம்பூர், 

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், மாநகராட்சி லாரிகள் மூலம் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழித்து வந்தனர்.

இந்தநிலையில் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டும், பயன்படுத்த முடியாத மக்காத குப்பைகளை எரிபொருள் பயன்பாட்டுக்காக அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்காக சென்னை மாநகராட்சி கமி‌ஷனரின் உத்தரவின்பேரில் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி அனிதா தலைமையில் மண்டல செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் தனசேகரன் மேற்பார்வையில் கொடுங்கையூர் 9–வது யூனிட்டுக்கு உட்பட்ட 34 முதல் 37 வரையிலான 4 வார்டுகளில் 13 இடங்களில் குப்பைகளை தரம் பிரிக்க கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மண்டல அதிகாரி அனிதா கூறியதாவது:–

பொதுமக்கள் ஆர்வம்

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் இந்த 13 இடங்களில் வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் கம்பெனிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. 

பின்னர் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்களும் ஆர்வமுடன் வாங்கிச்சென்று தங்கள் வீட்டில் உள்ள செடி, மரங்களுக்கு பயன்படுத்தி வருவதால் நல்ல மகசூல் கிடைக்கப்பெறுகிறார்கள்.

பயன்படுத்த முடியாத மக்காத குப்பைகள் அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

முதல் இடம்

இந்த 13 இடங்களிலும் குப்பைகள் தரம் பிரித்து விடுவதால் குறைந்த அளவு குப்பைகளே தற்போது கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் குப்பை லாரிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து அதிகளவில் உரம் தயாரிப்பதில் தண்டையார்பேட்டை மண்டலம் முதல் இடம் வகிக்கிறது. மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் 

உரத்தின் அளவை மேலும் அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story