ராமேசுவரம் கோவிலில் பாரம்பரிய முறைப்படி மீண்டும் முரசு ஒலிக்குமா?
ராமேசுவரம் கோவிலில் பராமரிப்பில்லாமல் முடங்கி கிடக்கும் முரசு பாரம்பரிய முறைப்படி மீண்டும் ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
பழமை வாய்ந்த ராமேசுவரம் கோவிலில் மன்னர்கள் காலத்தில் இருந்தே தினமும் அதி காலை மற்றும் மாலை 3 மணிக்கும் கோவிலின் நடை திறக்கும்போது முரசு ஒலிப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்தது.இந்த முரசு சத்தம் கோவிலை சுற்றி உள்ள பொது மக்களுக்கும், வரக்கூடிய பக்தர்களுக்கும் கோவில் திறக்கும் நேரத்தையும் தெளிவாக காட்டி வந்தது.
ஆனால் கடந்த சில வருடத்திற்கு முன்பு கோவிலில் உள்ள பழமையான சிறிய முரசு பழுதாகவே சில வருடங் களாக முரசு ஒலிக்கப்படாமல் இருந்து வந்தது.அதன் பின்னர் ராமேசுவரம் கோவிலில் புதிதாக 5 அடி உயரத்தில் 2 முரசுகள் வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே அவை ஒலித்தன.
கோவிலில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாளடைவில் புதிய முரசும் அடிக்கப்படாமல் கடந்த 4 வருடத்திற்கு மேலாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் தேர் நிறுத்தப்பட்டுள்ள மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுஉள்ளன. முரசு பராமரிப் பில்லாமல் தூசி படிந்து மிகவும் மோசமான நிலையில் காட்சிஅளித்து வருகிறது.
எனவே ராமேசுவரம் கோவிலில் பழமை மாறாமல் கோவில் நடை திறக்கும்போது பாரம்பரிய முறைப்படி பராமரிப்பில்லாமல் கிடக்கும் முரசு மீண்டும் ஒலிக்க திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.