மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். இந்த நிகழ்ச்சி, வருகிற 30-ந்தேதி(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து வெளியேறியது. தண்ணீர் திறப்பதற்கு முன்பு, கரையோரத்தில் வசிக்கிற மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக அபாய மணி ஒலிக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து, சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுரைக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு முன்னதாகவே தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு 850 கன அடியாகவும், 29-ந்தேதி மாலை 6 மணிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட உள்ளது. வருகிற 30-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்.
மதுரை சித்திரை திருவிழாவுக்காக திறக்கப்படும் தண்ணீரின் மூலம், வழிநெடுகிலும் வைகை ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். தண்ணீர் அருகே நின்றபடி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story