சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்: ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு


சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்: ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு
x
தினத்தந்தி 16 April 2018 4:30 AM IST (Updated: 16 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் செய்வதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியாகும் சரக்குகளை கையாள்வதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுங்கத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இந்த சரக்கு பெட்டக நிலையங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்களை எடுத்து செல்வதில் லாரி உரிமையாளர்களுக்கும், சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர்களுக்கும் வாடகை உயர்வு, ஒதுக்கீடு, குறித்த காலத்தில் வாடகை பணம் வழங்குவது உள்ளிட்டவைகளில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அனைத்து சங்கங்களும் இணைந்து கடந்த மார்ச் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். துறைமுக நிர்வாகத்தின் தலையீட்டின்பேரில் இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை எனக்கூறி ஒரு சில கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீர் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இதனால் சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அழுகும் பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் வழியில் நிற்பதால் அவை வீணாகி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த நேரத்துக்குள் கன்டெய்னர்கள் துறைமுகத்துக்குள் கொண்டு செல்லாததால் அவைகளை ஏற்றிச்செல்ல வேண்டிய கப்பல்களை அனுப்புவது தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் ஏற்றுமதிக்கான பணம் வருவதில் சிரமம் ஏற்படும்.

அத்துடன் இறக்குமதியாகும் கன்டெய்னர்களை தாமதாக வெளியே எடுத்தால் ஒரு கன்டெய்னருக்கு நாளொன்றுக்கு தலா சுமார் ரூ.5 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.

இரு தரப்பினரிடையே இருந்து வரும் பிரச்சினையால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சென்னை துறைமுக நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இது குறித்து சென்னை துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் கூறியதாவது:-

முதலில் இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது மட்டுமல்லாது நியாயம் அற்றது. லாரி உரிமையாளர்களில் மிகச்சிலரே இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். ஆனால் வரிசையில் செல்ல வேண்டியது உள்ளதால் முன்னால் ஒரு லாரியை நிறுத்திவிட்டாலும் பின்னால் வரும் லாரிகளை இயக்க முடியாது.

இருதரப்பினரிடையே உள்ள பிரச்சினைகளை தார்மீக அடிப்படையில்தான் தீர்த்துக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அடிக்கடி வேலை நிறுத்தம் செய்தால் துறைமுகத்தின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்பட்டு அதன் மூலம் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் லாரி உரிமையாளர்களும் பாதிக்கப்படக்கூடும்.

கன்டெய்னர் போக்கு வரத்து நெரிசல் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு தற்போது முற்றிலுமாக தீர்வு காணும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற வேலை நிறுத்தங்களை அனுமதிக்க முடியாது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கன்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக எண்ணூர் கடற்கரை சாலையில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. 

Next Story