தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 12 இடங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 12 இடங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2018 7:52 AM IST (Updated: 11 April 2018 7:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 12 இடங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஒவ்வொரு கிராமமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 58-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போன்று பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், பாளையாபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சில்வர்புரத்திலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது மைல், தபால் தந்தி காலனி, முருகேசன்நகர் ஆகிய பகுதிகளிலும் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10 இடங்களில் நடந்த போராட்டம், நேற்று முன்தினம் இரவு முதல் மேலும் 2 இடங்களுக்கு பரவியது. அதன்படி மாதவன் நகர், சிலோன்காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். இதனால் நேற்று மொத்தம் 12 இடங்களில் மக்கள் போராட்டம் நடந்தது. அ.குமரெட்டியபுரம் கிராமத்தில் தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் ஒவ்வொரு கிராமமாக பரவி வருவதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டம் நடைபெறும் இடங்களில் பந்தல் அமைக்கவோ, ஒலிபெருக்கிகள் வைக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் திறந்த வெளியில் மரத்தடி நிழலில் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் மழை பெய்த போது, மக்கள் மழையில் நனைந்தபடி போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் சந்தித்து ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

தூத்துக்குடி உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

வேதாந்தா நிறுவனத்துக்கு உட்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் உற்பத்தி இயக்கத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்காமல், மேலும் சில சந்தேகங்களுக்கு ஆலையிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக அறிகிறோம். உயிர்ச்சூழலுக்கு தொடர்ச்சியாக ஆபத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை மீதான நடவடிக்கை என்பது கண்துடைப்பாக இல்லாமல் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

இதேபோன்று முத்தையாபுரத்தை சேர்ந்த ரா.ஜோதிமணி, ராமச்சந்திரன் ஆகியோர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையில் திரவ கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது, அதனை எவ்வாறு வெளியேற்றுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. அந்த கழிவுநீரில் உள்ள நச்சுத்தன்மை பற்றிய அளவுகளை வெளிப்படையாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இன்று(அதாவது நேற்று) பெய்த மழையின் காரணமாக கழிவுநீர் பல வண்ணங்களில் மாறி அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த கழிவுகள் பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கப்படுவதாக அறிகிறோம். எனவே நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டு மக்கள் வாழத்தகுதி இல்லாத நிலையில் உள்ளது. எனவே, ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். 

Next Story