கோவை ரெயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் திறப்பு


கோவை ரெயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் திறப்பு
x
தினத்தந்தி 30 March 2018 4:30 AM IST (Updated: 30 March 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கோவை ரெயில் நிலையத்தில் 24 மணி நேர உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கு வந்து செல்லும் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை சிலர் கேலி-கிண்டல் செய்து வருவதுடன், நகை பறிப்பு சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இதைத்தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவை ரெயில் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ரெயில் நிலைய இயக்குனர் சதீஷ் சரவணன், நிலைய மேலாளர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ரெயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் அதிகாரிகள் பலர் பேசினார்கள். உதவி மையத்தை ரெயில்வே கூடுதல் மண்டல மெக்கானிக்கல் என்ஜினீயர் தீக்‌ஷா சவுத்ரி திறந்து வைத்ததுடன் பெண் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து பெண் போலீசாரும், ரெயில் நிலையத்துக்கு வந்த பெண்களுக்கு நோட்டீசுகளை வழங்கினார்கள்.
இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறியதாவது.

ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பெண்கள் பலர் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பணம், பொருட்களை பறி கொடுத்தவர்கள் கூட யாரிடம் புகார் செய்வது என்று நினைத்து புகார் செய்யாமல் சென்று விடுகிறார்கள். எனவே தான் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் ரெயில் நிலைய நுழைவு வாசலில் 24 மணி நேர உதவி மையத்தை அமைத்து உள்ளோம்.

இந்த மையத்தில் 4 பெண் போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அவர்களிடம் பெண் பயணிகள் ரெயிலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் செய்யலாம். அவ்வாறு செய்ததும் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் குற்ற சம்பவங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இந்த மையம் 2 வாரத்துக்கு மட்டும் இந்த இடத்தில் செயல்படும். பின்னர் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் இருக்கும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story