புத்த, ஜெயின், சீக்கியர்களுக்கு தனி மத அங்கீகாரம் வழங்கியபோது இந்து மதம் உடையவில்லையா?


புத்த, ஜெயின், சீக்கியர்களுக்கு தனி மத அங்கீகாரம் வழங்கியபோது இந்து மதம் உடையவில்லையா?
x
தினத்தந்தி 29 March 2018 3:15 AM IST (Updated: 29 March 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

புத்த, ஜெயின், சீக்கியவர்களுக்கு தனி மத அங்கீகாரம் வழங்கியபோது இந்து மதம் உடையவில்லையா? என்று அமித்ஷாவுக்கு மந்திரி எம்.பி.பட்டீல் கேள்வி எழுப்பினார்.

பெங்களூரு,

புத்த, ஜெயின், சீக்கியவர்களுக்கு தனி மத அங்கீகாரம் வழங்கியபோது இந்து மதம் உடையவில்லையா? என்று அமித்ஷாவுக்கு மந்திரி எம்.பி.பட்டீல் கேள்வி எழுப்பினார்.

இந்து மதம் உடையவில்லையா?

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமியை துமகூருவில் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் மற்றும் லிங்காயத் சமூக தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்புக்கு பின் எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தை உடைக்க சித்தராமையா முயற்சி செய்கிறார் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டுகிறார். புத்த, ஜெயின், சீக்கியர்கள் இந்து மதத்தில் தான் இருந்தனர். அவர்களுக்கு தனி மத அங்கீகாரத்தை மத்திய அரசு தான் வழங்கியது. அப்போது இந்து மதம் உடையவில்லையா?.

எந்த பாதிப்பும் ஏற்படாது

லிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் வழங்கினால் இந்து மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை அமித்ஷா புரிந்துகொள்ள வேண்டும். சித்தராமையா இந்து மதத்தை சேர்ந்தவர். ஆனால் சித்தராமையாவை இந்துக்கு எதிரானவர் என்று அமித்ஷா கூறியது சரியல்ல. தேர்தலில் நலப்பணிகளை செய்தவர்களை மக்கள் அங்கீகரிப்பார்கள்.

மாநிலத்தின் நிலம், நீர், எல்லை பிரச்சினை வரும்போது அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றன. இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழா இன்று (அதாவது நேற்று) நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அந்த விழாவை ரத்து செய்துவிட்டோம்.

கற்பிக்க வேண்டாம்

நான் சிவக்குமார சுவாமியிடம் ஆசி பெற்றேன். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவை சிவக்குமார சுவாமி வரவேற்று உள்ளார். நாங்கள் ஒவ்வொரு நிலையிலும் சிவக்குமார சுவாமியின் வழிகாட்டுதலை பெற்றே செயல்படுகிறோம்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

Next Story