தர்மபுரியில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா


தர்மபுரியில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி நகரில் ஏ.கொள்ளஅள்ளி ரோடு சாய்நகரில் சீரடி ஸ்ரீ சாய்பாபா கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தியான மண்டபம் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கும்பாபிஷேக விழா கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜைகளுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாஸ்துபூஜையும், யாகசாலை பூஜைகளும் நடந்தது.

சாய்பாபா சிலை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டு கோபுர கலசங்கள் நிறுவப்பட்டன. பின்னர் பல்வேறு யாகபூஜைகள், ஆராதனை வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாக சாலையிலிருந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்தவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சீரடி சாய்பாபா கோவிலிலிருந்து வந்த அச்சுதானந்த சாமி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

விழாவையொட்டி சாய் பாபாவிற்கு மகா அபிஷேகமும், ஆரத்தி வழிபாடும், அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் தங்க கிரீட மற்றும் தங்க கவச சிம்மாசன அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஹரி ஸ்ரீ சாய்சேவா டிரஸ்ட் தலைவர் டி.கே.பூபதி, பாரதமாதா ஆன்மிக சேவை மைய செயலாளர் தகடூர் வேணுகோபால் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், ஹரி ஸ்ரீ சாய்சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story