குமரி மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி தளியில் கைது


குமரி மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி தளியில் கைது
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடியை தளியில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொற கோபியை தீர்த்து கட்ட தோட்ட வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

தேன்கனிக்கோட்டை,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் பகுதியைச் சேர்ந்தவர் புனேஷ் மணி (வயது 37). இவரது நண்பர் வடசேரியைச் சேர்ந்த ஷாஜி என்கிற சைன் (37) இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 3-ந் தேதி அந்த பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் புனேஷ் மணியின் தம்பி, மான்சிங் கொலையில் தொடர்புடையவர்களை புனேஷ்மணி கொலை செய்ய திட்டமிட்டதால் இந்த இரட்டை கொலை நடந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக கிட்டு என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டம் கரும்பாட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் (31) என்பவர் தலைமையில் உள்ள கூலிப்படை இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. செல்வத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் செல்வம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் குமார் என்பவரின் தோட்டத்தில் தங்கி இருந்தது தெரிய வந்தது. அவரை நாகர்கோவில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செல்வம் மீது கொலை வழக்குகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தது தெரிய வந்தது.

மேலும் செல்வம், தளியில் தங்கி ஓசூர் பிரபல ரவுடி கொற கோபியை தீர்த்து கட்ட திட்டம் போட்டதும் தெரிய வந்தது. இது பற்றிய முழு விவரம் வருமாறு:-

ஓசூர் பிரபல ரவுடி கொற கோபிக்கும், கஜா கோஷ்டிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் கொற கோபியின் உறவினரான தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சூரியை, கஜா கோஷ்டி கடந்த 19.9.2016 அன்று வெட்டிக் கொலை செய்தது. இதன் பிறகு கொற கோபிக்கும், கஜா கோஷ்டிக்கும் இடையே பகை அதிகமானது. சேலம் மத்திய சிறையில் இருந்த கஜா கோஷ்டிக்கு அங்கு ஒரு பிரபல ரவுடி அறிமுகம் ஆனார்.

அவர் தான் தென் மாவட்டத்தில் இருந்து கொலைகள் செய்ய கூலிப்படையை அனுப்பி வைப்பவர் ஆவார். அவர் மூலம் தற்போது கைதாகி உள்ள ரவுடி செல்வம் கஜா கோஷ்டிக்கு அறிமுகம் ஆனார். இதையடுத்து ரவுடி செல்வத்தை கஜா கோஷ்டி, தளிக்கு வரவழைத்தனர். திட்டமிட்டபடி 2 கொலைகளை செய்த செல்வம், தளியில் தங்கி இருந்து கொற கோபியை தீர்த்து கட்ட எண்ணினார்.

இதற்கிடையே கொற கோபியின் எதிர் கோஷ்டியான ஓசூர் பிரபல ரவுடி சேட்டு கடந்த 13.1.2018 அன்று கடத்தப்பட்டு 14-ந் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு கொற கோபியை செல்வம் கோஷ்டியினர், தேடி வந்தனர். இந்த நிலையில் தான் கொற கோபி தர்மபுரி கோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண் அடைந்தார். இதன் பிறகும் கொற கோபியை கோர்ட்டுக்கு வரும் வழியிலோ, போலீஸ் பாதுகாப்பிலோ தீர்த்து கட்ட செல்வம் கோஷ்டி செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஓசூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வி.எச்.பி. நிர்வாகி மகேஷ் கொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வி.எச்.பி. மாவட்ட செயலாளர் சூரி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ரவுடி சேட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து ரவுடிகளின் அட்டகாசத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story