இந்தியாவில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிமான்ஸ் மருத்துவமனை பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்தார்.
பெங்களூரு,
தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பு அறிவியல் (நிமான்ஸ்) நிறுவனம் சார்பில் 22–வது பட்டமளிப்பு விழா பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மருத்துவ மேல்படிப்பை முடித்த டாக்டர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியாவில் மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக இருக்கிறார்கள். இது ஜப்பான் நாட்டின் மொத்த மக்கள்தொகையைவிட அதிகம்.
இதயநோய், சர்க்கரை நோயை விட மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பது மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.
இந்த மனநோயை நம்முடைய பாரம்பரிய சிகிச்சைகள் மூலம் போக்க முயற்சி செய்யலாம். அது மட்டுமின்றி யோகா, தியானம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மனநோய்க்கு சிகிச்சை அளிக்கும் இந்த நிமான்ஸ் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு 7 லட்சம் மனநோயாளிகள் வருகிறார்கள்.
வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான திட்டங்களை செயல்படுத்த மத்திய–மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை கூற வேண்டும். நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் திறனை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும்.
ஏழை நோயாளிகளுக்கு பரிவுடன் சிகிச்சை அளிக்கும் மனப்பக்குவத்தை மருத்துவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பட்டம் பெற்று வெளியே செல்லும் மருத்துவர்களுக்கு உண்மையான சவால் இப்போது தான் தொடங்குகிறது. புதிய உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் நோயாளிகளின் வலிகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும் பொறுப்பு உங்கள் மீது உள்ளது. உங்களின் சேவை முன்பைவிட தற்போது அதிகமாக தேவைப்படுகிறது.
மனநோய் பிரச்சினை நாட்டில் சாதாரணமாக இல்லை. மனநல சுகாதார பிரச்சினையில் நாடு அபாயகரமான நிலையை சந்தித்து வருகிறது. தொழில்நுட்பம், பொருளாதாரம், புவியிட மாறுதல்களால் நோயின் இயற்கை தன்மை மாறி வருகிறது. 2022–ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை அடையும். அதற்குள் மனநோயாளிகளுக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து தேவையான சிகிச்சை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இதற்கு தேசிய அளவில் ஒரு திட்டத்தை தொடங்க வேண்டும்.
இதில் அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்களிக்க வேண்டும். நாட்டில் மனநல நிபுணர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது. இது இன்னொரு சவால் ஆகும். நாட்டில் 5 ஆயிரம் மனநல நிபுணர்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும் 2 ஆயிரம் உளவியல் நிபுணர்கள் தான் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிக குறைவானது. மனநோயை கண்டறிய கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர், உளவியலாளர்ளை பயன்படுத்தலாம். மேலும் பொது சுகாதார சேவையில் முன்னணியில் உள்ள செவிலியர்களிடம் பரிந்துரைக்கலாம்.
ஒருவர் மீது ஏற்படும் பெரிய பிரச்சினைகளில் ஒன்றான களங்கம் தான் மனநோய்க்கு வழிவகுக்கிறது. இதை அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். இந்த வகையான கலாசார பிரச்சினைக்கு எதிராக நாம் போராட வேண்டியுள்ளது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.
இந்த விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசியதாவது:–
மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கடந்த 2014–ம் ஆண்டு மத்திய அரசு தேசிய மனநல சுகாதார கொள்கையை வகுத்தது. அதன் பிறகு இதற்கென ஒரு சட்டத்தை உருவாக்கி மனநோய்க்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நிமான்ஸ் மருத்துவமனையில் வடக்கு பகுதி கட்டிடத்தை கட்டுவதற்கு தேவையான நிதி உதவியை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.
நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட அளவில் மனநோய் சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். எல்லா மாவட்டங்களிலும் இத்தகைய சுகாதார மையங்கள் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
விழாவில் கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் பேசுகையில், “நிமான்ஸ் மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை கர்நாடக அரசு வழங்கி வருகிறது. அந்த மருத்துவமனையில் வடக்கு பகுதி கட்டிடத்தை கட்டுவதற்கு 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்து இருக்கிறோம். மனமகிழ் திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது“ என்றார்.
இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், நிமான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சுமார் ரூ.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன வசதிகள் கொண்ட கட்டிடத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.