திருப்பூர் மாவட்டத்தில் மழை: பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்


திருப்பூர் மாவட்டத்தில் மழை: பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்
x
தினத்தந்தி 1 Dec 2017 4:00 AM IST (Updated: 1 Dec 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் மழை நீர் சூழ்ந்தது.

திருப்பூர்,

வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முன்தினம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது.

திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள பாலாறு, உழுவி ஆறு, கொட்டைஆறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, வண்டி ஆறு, உப்புமண்ணம் ஓடை, கிழவிபட்டி ஓடை உள்ளிட்ட சிற்றாறுகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள ஓடைகள் ஆகியவை முக்கிய நீராதாரங்களாகும்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவியிலும் தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் மலை பகுதியில் கன மழை பெய்யும் போது அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கோவில் நிர்வாகம் அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பாலாறு, உழுவி ஆறு, கொட்டைஆறு, பாரப்பட்டி ஆறு, குருமலை ஆறு, வண்டி ஆறு, உப்புமண்ணம் ஓடை, கிழவிபட்டி ஓடை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இந்த அருவியில் கொட்டும் தண்ணீரின் பேரீரைச்சல் அமணலிங்கேஸ்வரர் கோவில் வரை கேட்டது. மேலும் பஞ்சலிங்க அருவி அருகே பஞ்சலிங்க ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள நடை பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்து கரைபுரண்டு ஓடியது. இந்த முரட்டு வெள்ளத்தில் வனப்பகுதிகளில் ஓடிந்து விழுந்து கிடந்த மரங்கள், இறந்து கிடந்த வன விலங்குகளின் உடல்கள் அடித்து வரப்பட்டன. மேலும் அமண லிங்கேஸ்சுவரர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோவில் பகுதியில் வைத்து இருந்த தடுப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் கோவிலின் வாசல் வரை வெள்ளம் சென்றது.

கோவில் முன்பு உள்ள உண்டியலில் தண்ணீர் புகுந்து விடக்கூடாது என்பதற்காக பாலித்தீன் கவர் போட்டு உண்டியலை பாதுகாப்பாக கோவில் நிர்வாகத்தினர் மூடி வைத்து இருந்தனர். வெள்ளம் சீற்றம் காரணமாக கோவிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. பஞ்சலிங்க அருவிக்கும் கோவில் பகுதிக்கும் செல்ல கோவில் நிர்வாகம் யாரையும் அனுமதிக்க வில்லை. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் திருமூர்த்தி வனப்பகுதியில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், அருவி பகுதியை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் பெய்த மழையால் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் நகர் பகுதியில் பெய்த மழையால் பார்க் ரோடு, குமரன் ரோடு, மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சந்திப்பு, அவினாசி செல்லும் ரோடு, பெருமாநல்லூர் செல்லும் ரோடு உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்த இந்த மழையால் புஷ்பா ரவுண்டானா பகுதியில் இருந்து காந்திநகர் வரையுள்ள சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

போக்குவரத்து நெருக்கடி காரணமாக பள்ளி செல்லும் மாணவ–மாணவிகள், வேலைக்காக செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள், வாகனங்களில் சென்றவர்கள் உள்ளிட்டோர் சிரமத்தை சந்தித்தனர். குடைகளை பிடித்தபடி ஏராளமானோர் நடந்து சென்றனர். மேலும் திருப்பூரின் பிரதான சாலைகளிலும், முக்கிய வீதிகளிலும் மழை நீர் தேங்கியது. ஊத்துக்குளி சாலை 2–வது ஒற்றைக்கண் பாலத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்கள் மெதுவாக சென்றதால் பல மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காங்கேயம் பகுதியிலும் நேற்று காலை முதல் மாலை வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழையால் மானாவாரி நிலங்களில் முளைத்துள்ள புற்கள் வேகமாக வளரும் என்றும், இதனால் மாடுகளுக்கு பசுந்தீவனம் அதிக அளவில் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் மழை விட்டு விட்டு பெய்ததால் விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு போகாமல் வீட்டில் முடங்கி கிடந்தனர். கிராமப்புற பகுதிகளில் வெங்காய நடவு, புகையிலை நாற்று நடவு போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

முத்தூரில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், முத்துமங்களம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்த பூவரசு மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதுபோல உடுமலை, தாராபுரம், காங்கேயம், குண்டடம், வெள்ளகோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது.


Next Story