குன்னூரில் வருகிற 11–ந் தேதி முதல் போலீசாரை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்

குன்னூரில் போலீசாரை கண்டித்து வருகிற 11–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குன்னூர்,
குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் எஸ்.எஸ்.வி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
குன்னூரில் தேயிலை பாரம் ஏற்றும் லாரிகளில் பாரம் ஏற்றும் தொழிலாளர்களில் ஒருவர் லாரியின் மேல்புறமாகவும் 3 பேர் லாரியின் கேபினிலும் அமர்த்து சென்று ஒவ்வொரு தேயிலை கிடங்குகளிலும் தேயிலை பாரம் ஏற்றுகின்றனர்.
பாரம் ஏற்றும் தொழிலாளர்கள் இவ்வாறுதான் லாரியில் அமர்ந்து தேயிலை பாரம் ஏற்ற செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இது போன்று தொழிலாளர்கள் லாரியில் செல்லும் போது போலீசார் சோதனை என்ற பெயரில் மடக்கி பிடித்து, ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்கின்றனர். மேலும் அபராதம் விதிக்கின்றனர்.
மேலும் நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலாக இருக்கும் பர்லியாரில் இருந்து ஊட்டி வரை போலீசார் லாரிகளை சோதனை செய்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சென்று இறக்க முடிவது இல்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். தொழிலும் பாதிக்கப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே போலீசாரை கண்டித்து வருகிற 11–ந் தேதி முதல் குன்னூரில் உள்ள அனைத்து லாரிகளும் காலவரைவற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டம் முடிவு செய்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.