கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் குறுவை, சம்பா சாகுபடியை இழந்து தவித்தனர். இந்தாண்டு மேட்டூர் அணை, வடகிழக்கு பருவமழையை நம்பி கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கி உள்ளனர். குமராட்சி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் உள்ளிட்ட சில இடங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பும் செய்துள்ளனர். தற்போது அந்த நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது.
பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் நாற்றங்கால் அமைத்து வைத்துள்ளனர். சில இடங்களில் போர்வெல் மூலமாக நடவு செய்துள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. அதை வாய்க்காலில் வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகும் நிலை உருவாகும்.
இது பற்றி வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இது வரை 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கீழபருத்தி, எடையார், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இருப்பினும் மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் வயல்களில் தேங்கி உள்ள தண்ணீரை விவசாயிகள் வடிய வைத்து வருகின்றனர். இதனால் தற்போது மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.