மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிப்பு


மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2017 2:30 PM IST (Updated: 16 Sept 2017 1:35 PM IST)
t-max-icont-min-icon

எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் அரச குடும்பத்தின் பொற்கொல்லர் ஒருவரின் கல்லறையைக் கண்டறிந்துள்ளனர்.

கிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி யாளர்கள் அரச குடும்பத்தின் பொற்கொல்லர் ஒருவரின் கல்லறையைக் கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு மகன்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமீனெம்ஹட் எனும் அந்தப் பொற்கொல்லர் தன் மனைவியுடன் அமர்ந்திருக்கும் நிலையில் உள்ள சிற்பங்களும் அந்த மம்மிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கெய்ரோவில் இருந்து 700 கி.மீ. தொலைவில் உள்ள லக்சர் நகரத்தில் கி.மு. 16-ம் நூற்றாண்டில் இருந்து 11-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த ‘புதிய அரசவம்சம்’ என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்லறையில் உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பதப்படுத்தப்பட்ட உடல்களும் அமீனெம்ஹட் உடன் தொடர்புடையதா என்பது குறித்து விளக்கப்படவில்லை.

அந்தத் தாய் ஐம்பது வயதில் இறந்திருக்கலாம் என்றும், பாக்டீரியாக்களால் எலும்புகள் பாதிக்கப்படும் நோய் அவருக்கு இருந்ததாகவும் சோதனை முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

அவரது இரண்டு மகன்களும் முறையே இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருந்ததாகவும், அவர்களது உடல்கள் நல்ல நிலையில் பதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எகிப்தின் அந்தக் காலகட்டத்தில் சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்பட்ட அமுனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமீனெம்ஹட்டின் இந்தக் கல்லறை, டிரா அபுல் நாகா இடுகாட்டில் மேலும் பல விஷயங்களை இனி கண்டுபிடிக்க உதவும் என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கல்லறைக்கு உள்ளேயும் வெளியேயும், அடக்கம் செய்ய உபயோகப்படும் பல பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சவப்பெட்டிகள், பதப்படுத்தப்பட்ட உடல்கள், அடக்கம் செய்யும்போது பயன்படுத்தப்படும் முகமூடிகள், சில நகைகள், சிலைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இன்னும் இந்த வேலைகள் முடியவில்லை என்றும் எகிப்து தொல்பொருள் துறை அமைச்சர் கலீத் அல் அனானி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நான்கு புதுப் பெயர்களைப் படித்ததாகவும் அந்தப் புதுப் பெயர்கள் என்ன, அவர்களின் கல்லறை எங்கே என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும், இதுவரை அவர் களின் கல்லறை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அவர்கள்தான் கல்லறைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கக்கூடும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

“நாங்கள் இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சியைத் தொடரப்போகிறோம். ஒன்றோ இரண்டோ அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் நான்கு கல்லறைகளோ கூட இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்படலாம்” என்று அமைச்சர் கலீத் அல் அனானி கூறியிருக்கிறார். 

Next Story