குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனித கடவுள்’ ஆனது எப்படி?


குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனித கடவுள்’ ஆனது எப்படி?
x
தினத்தந்தி 30 Aug 2017 10:45 AM IST (Updated: 30 Aug 2017 10:45 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மதத்தலைவருக்குப் பின்னால் எப்படி இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டது? பஞ்சாப் மாநிலமும், அரியானா மாநிலமும், சண்டிகர் யூனியன் பகுதியும் ஏன் அலறுகின்றன? மத்திய ஆட்சி ஏன் மிரள்கிறது?

ரு மதத்தலைவருக்குப் பின்னால் எப்படி இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டது? பஞ்சாப் மாநிலமும், அரியானா மாநிலமும், சண்டிகர் யூனியன் பகுதியும் ஏன் அலறுகின்றன? மத்திய ஆட்சி ஏன் மிரள்கிறது?

பஞ்சகுல்லாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது 2002-ம் ஆண்டு போடப்பட்ட பாலியல் குற்ற வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனே, பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு மாநிலத்திலும் ரெயில்வே நிலையங்களும், நீதிமன்றம் அருகே பெட்ரோல் பங்குகளும் தீக்கிரையாகின. பிரபல தொலைக்காட்சி ஊடக வாகனம் தீக்கிரையானது. 38 பேர் பலியானார்கள். 250 பேர் காயம் அடைந்தனர். இதை பற்றிய செய்தியை நமது மாநிலத்திலும், ‘கற்பழிப்பு சாமியார்’ எனப் போடுகிறார்கள். இவர் வெறும் கற்பழிப்புக் குற்றவாளியாக மட்டுமே பார்க்கப்பட்டாரா?

அப்படியானால் எப்படி இந்த அளவுக்கு மக்கள் லட்சக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட இவருக்குப் பின்னால் மட்டுமல்ல, இவருக்கு ஆதரவாகத் தெருவுக்கு வந்து போராட முடியும்?

தமிழ்நாட்டிலும் ஒரு சாமியார் வன்புணர்ச்சிக்காக இரண்டு ஆயுள் தண்டனை வாங்கிய வரலாறு உண்டு. எத்தனை பேர் அவருக்காகப் போராட வந்தார்கள்?

இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் உதவியை நாடி 2012-ம் ஆண்டு அதாவது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஆதரவு கேட்டு வந்தது. இவரும் அப்போது காங்கிரஸை ஆதரித்தார்.

அடுத்து 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதா இவரது ஆதரவை கேட்டார்கள். இவரும், பா.ஜ.க.-வுக்கு ஆதரவு கொடுத்தார்.

ஏன் இப்படி பெரிய கட்சிகள் எல்லோரும் இவருக்கு பின்னால் சென்றார்கள்? அப்படியானால் அந்த பெரிய கட்சிகளை விட இவர் அந்த வட்டாரத்தில் பெரியவர் என்றுதானே பொருள்?

104 நல்வாழ்வுத் திட்டங்களை இவர் அமல்படுத்தி வருகிறார். அதில் குறைந்த விலைக்கு உணவுப் பொருள்கள் வழங்குகிறார்.இலவச மருந்து வழங்குகிறார்.

இங்கே அதுபோல் செய்பவர்களை, ஏழை மக்கள் அணிதிரண்டு அரசியல் தலைமையில் ஏற்றுக் கொள்கிறார்களே!

அது போல நல்வாழ்வுத் திட்டங்களை வழங்கும் பணியை அரசு செய்யாத போது, அதைச் செய்கின்ற மதத் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? ஆகவே, பின்தங்கியுள்ள மக்களை, கோடிக்கணக்கில் பின்தங்கியவர்களாகவே தக்கவைத்துக்கொள்ளும் ஒரு மோசமான சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை ஆளவந்தோர் தக்கவைத்துக்கொள்ளும் வரை சாதி, மத, வேறுபாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ள ஒரு சமூகத்தை நாம் வைத்துக் கொண்டிருந்தால், அங்கே சமத்துவம் பேசுபவர்கள், நல்வாழ்வுத் திட்டம் தருபவர்கள் பின்னால் தான் கோடிக்கணக்கில் மக்கள் அணி திரள்வார்கள்.

அந்த உண்மையைத்தான் நாம் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சந்திக்கிறோம். அதற்காகப் பாலியல் வன்முறையைச் செய்தவரை எப்படி ஆதரிக்க முடியும் என்பது நியாயமான கேள்வி.

ஆனால் இவ்வாறு அணி திரண்டுள்ள மக்கள், இன்றைய ஆள்வோர் மீது நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில், சாதாரணப் பொதுமக்கள் இது போன்ற சாமியார்களை நம்புவதும் அரசு வேண்டுமென்றே பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் கருதுவதும் நடக்கத்தான் செய்யும்.

அதையும் தாண்டி இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு திரைப்பட நடிகராகவும் ஆகிவிட்டார். கேட்கவா வேண்டும்? சில படங்களில் இவர் பெரிய கதாநாயகனாக நடித்துள்ளார். ஆளும் பொலிவுடன் உயரமாக, தாடி வைத்து ஆக்ரோஷத்துடன் தோற்றம் அளிப்பார்.

இவையெல்லாம் இருப்பதால்தான் இவருக்கு பின்னால் மக்கள் கூட்டமும், அரசியல் கட்சிகளும் செல்கின்றன என்பதே இன்றைய நிலை.

நீதிமன்றம் முன்னால் திரண்ட 300 ஊடகங்களில், வெளியூர் ஊடகத்தார் இவரை பாலியல் குற்றவாளி எனப் புரிந்துகொண்டு செய்தி எடுக்கும் போது, உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவரிடம், ஆங்கிலக் காட்சி ஊடகம் கேட்கிறது. “ஏன் இவருக்குப் பின்னால் இவ்வளவு கூட்டம்?”

அதற்கு அவர் பதில் கூறுகிறார். “ஒரு பேரிடர் வருமானால், இவரது ஆதரவாளர்கள்தான் அங்கே களத்தில் இறங்கி உதவிகள் அனைத்தும் செய்வார்கள். பாலியல் தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பல நூறு பேரை இவரது ஆதரவாளர்கள் மீட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்”

அதாவது சமூக அர்ப்பணிப்புள்ள, சமூக நீதியைப் பரப்புகின்ற, நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துகிற ஒரு கூட்டத்தையும், அதன் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கையும், மக்கள் மனிதக் கடவுளாகப் பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அப்படியானால், இந்த நற்பணிகளைச் செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி தானே எழுகிறது.

-டி.எஸ்.எஸ்.மணி

Next Story