புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர்மட்டம் 278 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.
சென்னை,
பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பருவமழை பொய்த்து போனதால் ஏரிகள் வறண்டு போனது.
இது தவிர கல்குவாரி தண்ணீர், நெய்வேலி சுரங்க தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் ஓரளவு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
278 மில்லியன் கன அடி
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் இருந்து போதுமான அளவு தண்ணீர் எடுக்க முடியாத நிலை கடந்த சில மாதங்களாக ஏற்பட்டது. இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் தற்போது ஓரளவு ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக பூண்டி ஏரியில் 24 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 21 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 71 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 162 மில்லியன் கன அடி தண்ணீர் உட்பட 278 மில்லியன் கன அடி மட்டும் தண்ணீர் உள்ளது. தற்போது ஏரிகளில் தேங்கி உள்ள 278 மில்லியன் கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம்
இது தவிர 22 கல்குவாரிகளில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 70 முதல் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் மற்றும் நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர போரூர் ஏரியில் இருந்து தினசரி 4 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. சென்னையில் தற்போது ஓரளவு மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story