திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை மடிவாளா போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்த ஹரீஷ் (வயது 32), தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் சென்னம்மா பேட்டை அருகே உள்ள திருவல்லாங்காடுவை சேர்ந்த சங்கர்ராம் என்ற அப்பு (21), வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரத்தை சேர்ந்த சுகேல் (22), வாணியம்பாடி அருகே கோட்டைதெரூர் பகுதியை சேர்ந்த அஸ்கர் அலி (21) என்பது தெரியவந்தது.இவர்கள் அடிக்கடி பெங்களூரு வந்து திருட்டில் ஈடுபட்டுவிட்டு தமிழகத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 620 கிராம் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
கைதானவர்களில் ஹரீஷ் முக்கிய குற்றவாளி ஆவார். இவர் மற்ற 3 பேரையும் சேர்த்து கொண்டு திருட்டில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2016–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மடிவாளா அருகே நடந்த ஒரு கொலையில் ஹரீசுக்கு தொடர்பு உள்ளது. ரூ.50 லட்சம் பணம் பெற்று கொண்டு அவர் இந்த கொலையை செய்துள்ளார். பெங்களூருவில் நடந்த 10–க்கும் அதிகமான திருட்டில் இவருக்கு தொடர்பு உள்ளது.மேலும், சங்கர்ராம் மீது பெங்களூருவில் 5 திருட்டு வழக்குகளும், தமிழகத்தில் 3 திருட்டு வழக்குகளும் பதிவாகி உள்ளது. கடந்த 2016–ம் ஆண்டு வீடு புகுந்து திருட முயன்றபோது 60 வயது மூதாட்டியை அவர் கொன்றதும், அதே ஆண்டு அரக்கோணம் ஐ.என்.எஸ். விமான தளத்தில் நுழைந்த அவர் பாதுகாப்பு ஊழியரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி அவரை சுட்டு கொல்ல முயன்றதாகவும் அரக்கோணம் போலீசில் வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதேபோல், பெங்களூருவில் திருட்டில் ஈடுபட்டதாக ராகவேந்திரா படாவனேயை சேர்ந்த சீனிவாஸ் (28), தொட்டநாகமங்களா கிராசை சேர்ந்த மது (21), தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை சேர்ந்த உமேஷ் (26) ஆகிய 3 பேரை பரப்பனஅக்ரஹாரா போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 592 கிராம் தங்க நகைகள், 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டன. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும்.திருட்டு வழக்கு தொடர்பாக கைதான 7 பேரிடம் இருந்து மடிவாளா, பரப்பனஅக்ரஹாரா போலீசார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது பெங்களூரு மாநகர கிழக்கு மண்டல போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, கைதான 4 பேர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்களை போலீஸ் கமிஷனர் சுனில் குமார் பார்வையிட்டார்.