உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா செப்டம்பர் 21–ந் தேதி தொடங்கும்


உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா செப்டம்பர் 21–ந் தேதி தொடங்கும்
x
தினத்தந்தி 25 July 2017 4:12 AM IST (Updated: 25 July 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா செப்டம்பர் 21–ந் தேதி தொடங்குவதாக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

பெங்களூரு,

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா செப்டம்பர் 21–ந் தேதி தொடங்குவதாக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்தார். 30–ந் தேதி ஜம்பு சவாரி நடைபெறுவதாக அவர் கூறினார்.

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கொண்டாட்டம் குறித்து கர்நாடக அரசின் உயர்மட்ட குழு கூட்டம் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான மகாதேவப்பா, கன்னட கலாசாரத்துறை மந்திரி உமாஸ்ரீ, பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட், சுற்றுலாத்துறை மந்திரி பிரியங்க் கார்கே மற்றும் மைசூரு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா செப்டம்பர் 21–ந் தேதி தொடங்கப்படும். அன்றைய தினம் சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை செய்து இந்த விழா தொடங்கி வைக்கப்படும். அதே மாதம் 30–ந் தேதி ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெறும். இந்த விழாவை தொடங்கி வைக்கும் முக்கிய பிரமுகரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முதல்–மந்திரியாகிய எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் யார் என்பது முடிவு செய்யப்படும். தசரா விழாவை இந்த ஆண்டு சம்பிரதாயப்படி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தசரா விழா நிகழ்ச்சிகளை முடிவு செய்ய மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா தலைமையில் ஒரு செயல் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் இந்த குழுவின் துணைத்தலைவராக இருப்பார். மந்திரிகள் உமாஸ்ரீ, பிரியங்க் கார்கே ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

தசரா விழாவை விளம்பரப்படுத்தும் பணி சுற்றுலா துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை தசரா கண்காட்சியில் மாவட்ட பஞ்சாயத்துகளின் அரங்குகள் இடம் பெறுவது வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் 15 முதல் 20 துறைகள் இந்த கண்காட்சியில் இடம் பெறும். இதுகுறித்து தலைமை செயலாளர் அரசாணை பிறப்பிப்பார்.

மைசூருவில் ஜம்பு சவாரி நடைபெறும் ராமசாமி சர்க்கிளில் இருந்து பன்னிமண்டபம் வரை உள்ள சாலை கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு இதர சாலைகளையும் மேம்படுத்தும்படி பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளேன். 30–ந் தேதி மதியம் 1.15 மணிக்கு ஜம்பு சவாரி ஊர்வலம் நந்திபூஜை செய்து தொடங்கி வைக்கப்படும். தசரா ஊர்வலத்தை இன்னும் சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் இதர மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் தசரா விழாவின்போது வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கப்படும். கடந்த ஆண்டு தசரா விழாவுக்கு ரூ.13.20 கோடி செலவானது. இந்த ஆண்டு இந்த செலவு ரூ.15 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் செப்டம்பர் 27–ந் தேதி உலக சுற்றுலா தின விழாவும் மைசூருவில் நடத்தப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story