கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு


கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 25 July 2017 3:15 AM IST (Updated: 24 July 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இளையான்குடி,

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, ராமநாதபுரம் வரை பாய்கிறது. இந்த ஆற்றை நம்பி மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் ஆறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முதல் பிராமணக்குறிச்சி, கச்சாத்தநல்லூர் வரை உள்ள ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்றில் மணல் இல்லாமல் பாறை கற்களாக காட்சியளிக்கின்றன. இத்துடன் மணல் அள்ளப்பட்டதால் ஆற்றில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது.

குறிப்பாக இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூர் பகுதியில் அனுமதியின்றி அதிக அளவில் மணல் அள்ளப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அள்ளப்படும் மணலை லாரிகள் மூலம் காடு, வயல் பகுதிகள் வழியாக தாராளமாக கடத்தி வருகின்றனர். அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர். கச்சாத்தநல்லூர் பகுதியில் உள்ள ஆற்றில் அதிக அளவு மணல் அள்ளியதால், ஆற்றுப்பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்களாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து கச்சாத்தநல்லூரை சேர்ந்த விவசாயி கருப்புசாமி என்பவர் கூறியதாவது:– மழையின்றி விவசாயம் நலிந்து வரும் வேளையில், முக்கிய நீராதாரமாக உள்ள ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் தங்களது ஆதாயத்திற்காக கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story