திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிக்கு ஏங்கும் நோயாளிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதன்படி, தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாகவும், 500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய அரசு மருத்துவமனையாக, திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதன்படி, தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாகவும், 500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 445 படுக்கைகள் மட்டும் இருந்தன. ஆனால் 500–க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால், ஏராளமான நோயாளிகள் தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் ஒரே படுக்கையில் 2 நோயாளிகள் அமர வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். எனவே படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் 200 படுக்கை வசதி கொண்டது. ஆனால் தற்போது 70 கட்டில்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 130 கட்டில்கள் இன்னும் வரவில்லை.
இதனால் போதுமான படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். குழந்தைகள் சிகிச்சை பிரிவில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு உள்ளது. தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதுமான படுக்கை வசதி இல்லாததால், குழந்தைகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நோயாளிகளுக்கு தேவையான தண்ணீர் வசதியும் போதுமான அளவு இல்லை. இதன்காரணமாக சில வார்டுகளில் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் 12 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4–ல் மட்டுமே தண்ணீர் உள்ளது. மேலும் அங்குள்ள கிணறும் வறண்டுவிட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மாநகராட்சி லாரி மூலம் தினமும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிணற்றில் நிரப்பப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் சில குழாய்கள் சேதமடைந்து உள்ளன. இதன்காரணமாக தண்ணீர் வீணாகி வருகிறது. தற்போது கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், தண்ணீர் வீணாகி செல்வது கவலை அளிக்கிறது. எனவே மருத்துவமனையில் ஒரு புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும். அங்கிருந்து அனைத்து வார்டுகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ஆண்கள் சிகிச்சை பிரிவுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியை காணவில்லை. தற்போது, நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் வெளியே சென்று குடிநீர் வாங்கி குடித்து வருகின்றனர். எனவே நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்கும் அறை அருகே குடிநீர் தொட்டி வைக்க வேண்டும்.
இதேபோல, மருத்துவமனையில் ஒரு ஜெனரேட்டர் மட்டுமே உள்ளது. இதன்மூலம், இதய சிகிச்சை பிரிவு உள்பட 70 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்க முடிகிறது. இதனால் மின்சாரம் கிடைக்காத வார்டு பகுதி நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி மதிப்பில் நவீன எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டது. இந்த கருவியுடன், டாக்டர்கள் இருக்கும் இடத்திலேயே நோயாளிகளின் எக்ஸ்ரே பதிவுகளை பார்த்து சிகிச்சை அளிப்பதற்காக எல்.சி.டி. டி.வி வழங்கப்பட்டது. ஆனால் டாக்டர்களின் அறையில் டி.வி. வைக்கப்படவில்லை. இதனால் எக்ஸ்ரே எடுத்தவுடன், அதனை வாங்க நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.
மேலும், எக்ஸ்ரே பதிவுகளை வாங்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று நம்பி வரும் ஏழை, எளிய நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, சேதமடைந்துள்ள சி.டி.ஸ்கேன் மையத்துக்கு பதிலாக கட்டப்பட்டுள்ள, புதிய கட்டிடம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கின்றன. இவற்றை திறந்து நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவுக்கு நியமிக்கப்பட்ட டாக்டர் சில மாதங்களில் ஓய்வு பெற்றுவிட்டார். அதன்பிறகு புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே விபத்துகளில் தலைக்காயம் அடைந்து வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்காமல் பலியாகும் நிலை உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தலைக்காய பிரிவுக்கு ஒரு மூளை நரம்பியல் நிபுணர் நியமிக்கவேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். தற்போது மருத்துவமனையில் 55 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக டாக்டர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 10 டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.