மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான டெக்னீசியன்களை உடனடியாக நியமிக்க வேண்டும்


மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான டெக்னீசியன்களை உடனடியாக நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jun 2017 4:30 AM IST (Updated: 26 Jun 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான டெக்னீசியன்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை,

சிறுநீரக பிரச்சினையால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்ய டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். டயாலிசிஸ் எந்திரத்தை கொண்டு ஒரு நோயாளிக்கு 4 மணி நேரம் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. மேலும் அந்த நபருக்கு வாரம் 2 முறை என தனது வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இதனிடையே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. பணம் இல்லாத ஏழை எளிய, நடுத்தர மக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

ஒப்பந்த பணியாளர்கள்

இத்தகைய நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகள், பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் மொத்தம் 13 டயாலிசிஸ் எந்திரங்கள் உள்ளன. இந்த எந்திரங்களை இயக்குவதற்கு நிரந்தர பணியாளர் கிடையாது. 4 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டில் மட்டும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள 3500க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்து வருகின்றது. மேலும் கால தாமதத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

குறைந்த ஊழியர்களை கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள டயாலிசிஸ் எந்திரங்களை இயக்குவதற்கு செவிலியர்கள் மற்றும் இதர துறைகளில் உள்ள மருத்துவ பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மற்ற வார்டுகளில் ஆள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

டெக்னீசியன்கள்

மேலும் கல்வி தகுதியுடன் கூடிய டெக்னீசியன்களை கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படாததால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற சம்பவம் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்த ஊழியர்களால் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.

இதனால் அதிக பணம் செலவு செய்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இத்தகைய அவலநிலையை போக்க அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் கல்வித்தகுதியுடன் கூடிய டயாலிசிஸ் டெக்னீசியன்கள் மட்டுமே நியமிக்க தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story